இந்தியா

"முட்டை, இறைச்சியை  முழுமையாக சமைக்கவும்"- பறவை காய்ச்சல் குறித்த எச்சரித்த அமைச்சர்

"முட்டை, இறைச்சியை  முழுமையாக சமைக்கவும்"- பறவை காய்ச்சல் குறித்த எச்சரித்த அமைச்சர்

Veeramani

இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் பரவுவதால் இறைச்சி மற்றும் கோழி முட்டைகளை உட்கொள்வதற்கான பாதுகாப்பான வழிமுறைகளை மத்திய கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சில சமையல் குறிப்புகளை தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மக்கள் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா  எனப்படும் பறவைக் காய்ச்சலைத் தவிர்க்க முடியும் என்றும் கூறினார். இதுகுறித்து கிரிராஜ்சிங் "சில இடங்களில் புலம் பெயர்ந்த மற்றும் காட்டு பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறப்பதாக செய்திகள் வந்துள்ளன. எனவே சாப்பிடுவதற்கு முன்பு இறைச்சியையும், முட்டையையும் முழுவதுமாக சமைக்கவும். கவலைப்பட ஒன்றுமில்லை. சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன, மாநிலங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன" என்று ட்வீட் செய்தார்.

இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது பற்றிய அறிக்கையையும் கிரிராஜ் சிங் பகிர்ந்து கொண்டார். அங்கு 12 மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், பெரும்பாலும் புலம்பெயர்ந்துவந்த லட்சக்கணக்கான பறவைகள் கடந்த 10 நாட்களில் இந்தியா முழுவதும் இறந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் "கோழி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விற்பனையை மாநிலங்கள் ஒழுங்குபடுத்தியுள்ளன. அண்டை  மாநிலங்களுக்கு இடையிலான இயக்கம், குறிப்பாக எல்லை மாவட்டங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டு, நிலைமையைக் கண்காணிக்க புது டெல்லியில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைத்துள்ளது.”என்றார்.

வனத்துறையை ஒருங்கிணைப்பதுடன் "கோழி பண்ணைகளின் உயிரியல் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நீக்கம் செய்தல், இறந்த பறவைகளை முறையாக அப்புறப்படுத்துதல், கண்காணிப்பை அதிகரித்தல்" ஆகியவற்றை மேம்படுத்துமாறு  மத்திய அரசின் ஆலோசனை மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது.  அதுபோல பாதிக்கப்பட்ட இறைச்சி முழுமையாக சமைக்கப்படாவிட்டால் மட்டுமே வைரஸ் பறவையிலிருந்து மனிதனுக்கு பரவுவது சாத்தியமாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.