இந்தியா

“டிக்டாக்கை தடை செய்ய வேண்டும்” - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்ய காரணம் ?

webteam

‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய வேண்டும் என இந்திய அளவில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்தியாவில் ஏராளமானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பலர் பிரபலமடைந்து, அதிலிருந்து திரையுலகு வரை பல்வேறு வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு அடிமைப்பட்டு கிடப்பதாகவும், அநாகரீமாக நடந்துகொள்வதாகவும் இந்தியாவில் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பல்வேறு விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பலர் டிக்டாக்கில் விமர்சிக்கப்பட்டு, அதனால் தற்கொலையும் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் சாகச வீடியோக்களை எடுப்பதாக உயிரை இழந்துள்ளனர். இவ்வாறாக இந்த செயலி மீது நீண்ட நாட்களாக பல விமர்சனங்கள் உள்ளன.

இந்த செயலி ஆபாசத்தை சிறுவர்களிடையே பரப்பும் விதமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக்கிற்கு தடை விதித்தது. இதையடுத்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் ஆபாசமாக இருந்த 60 லட்சம் வீடியோக்களை நீக்கியது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட டிக்டாகிற்கான தடை நீக்கப்பட்டது. இருப்பினும் டிக்டாக் மீதான விமர்சனங்கள் தினந்தோறும் எழுந்துக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். அது சீனா மொபைல் ஆப் என்பதால் அதை தடை செய்ய வேண்டும் எனவும், அதன்மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படலாம் எனவும் பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அத்துடன் டிக்டாக்கில் இளைஞர் ஒருவர் இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசுவது போல சித்தரித்து வெளியிட்டிருக்கும் வீடியோவை குறிப்பிட்டு, இதுபோன்ற வீடியோக்கள் பெண்கள் மீது ஆசிட் வீசும் எண்ணத்தை ஊக்குவிக்கும் என குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இதுபோன்ற வீடியோக்களை அனுமதிக்கும் டிக்டாக் செயலியை முதலில் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் கொந்தளித்துள்ளனர். இதுமட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரில் டிக் டாக் செயலிக்கு இருந்த ஸ்டார் மதிப்பீடு 4.5 லிருந்து 3.2 ஆக குறையும் அளவிற்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.