இந்தியா

‘உரி தி - சர்ஜிகல் ஸ்டிரைக்’கை தொடர்ந்து ‘அபிநந்தன்’, ‘புல்வாமா’ பெயரில் பாலிவுட் படங்கள்?

‘உரி தி - சர்ஜிகல் ஸ்டிரைக்’கை தொடர்ந்து ‘அபிநந்தன்’, ‘புல்வாமா’ பெயரில் பாலிவுட் படங்கள்?

webteam

உரி தாக்குதலை தொடர்ந்து புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதலும் பாடமாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய நாடே விமானி அபினந்தனின் வருகையிற்காக காத்திருக்கும் சூழலில் பாலிவுட்டில் இந்த தாக்குதலை படமாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தியது. இந்த மொத்த நிகழ்வுகளும் ‘உரி தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் பாடமாகியது. இந்த திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. அத்துடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அதே பாணியில் புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல்களும் திரைப்படமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஐ.எம்.பி.பி.ஏ அமைப்பு, “கடந்த ஒரு வாரமாக புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல் குறித்த படங்களுகான தலைப்புகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

பொதுவாக பாலிவுட்டில் ஒரு படத்தின் தலைப்பை பதிவு செய்ய வேண்டும் என்றால் தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பத்தில் 4 அல்லது 5 தலைப்புகளை பதிவு செய்து ரூ250 உடன் 18% ஜிஎஸ்டியையும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். அந்தவகையில் இத்தாக்குதல்களுக்கு பல வகையான தலைப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக ‘புல்வாமா: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’, ‘வார் ரூம்’, ‘ஹிந்துஸ்தான் ஹமாரா ஹை’, ‘புல்வாமா டெரர் அட்டாக்’, ‘தி அட்டாக்ஸ் ஆஃப் புல்வாமா’, ‘பால்கோட்’, ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற தலைப்புகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக, புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. அதனையடுத்து, இந்திய விமான படை எல்லை கடந்து சென்று பால்கோட்டிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதலில் இந்தியா விமான படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் போர் கைதியாக சிக்கியுள்ளார். அவரை நாளை பாகிஸ்தான் விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.