இந்தியா

“இது அரசியல் செய்யும் நேரமில்லை” : - யோகி ஆதித்யநாத் மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

webteam

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகக் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கவில்லை எனப் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வாகனங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கவில்லை எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிஜிட்டல் காணொலிக் கூட்டம் மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் சார்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அந்தப் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியிருந்தால், இந்நேரம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 72 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள் எனக் கூறியுள்ளார். அனுமதி கிடைக்காமல் தற்போது அந்த பேருந்துகள் ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைகளில் நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், ஆனால் உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜகவினர் அரசியல் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், இது அரசியல் செய்யும் நேரமில்லை எனவும் அவர் யோகி ஆதித்யநாத்திற்கு தெரிவித்துள்ளார்.