இந்தியா

’நாட்டில் சுஷாந்த் வழக்கு பிரச்னை மட்டும்தான் இருக்கிறதா?’ - மணிஷ் சிசோடியா கேள்வி

’நாட்டில் சுஷாந்த் வழக்கு பிரச்னை மட்டும்தான் இருக்கிறதா?’ - மணிஷ் சிசோடியா கேள்வி

Veeramani

சுஷாந்த் மரணம் தொடர்பான பிரச்னையை பெரிதாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் போன்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிப்பதாக மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகர் ரியா மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிப்பது குறித்து ஊடகங்களில் அதிகப்படியான செய்தி வெளியானதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். ஒரு பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் போன்ற உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிப்பதாகவும் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

"சீனா எங்கள் நிலத்தை விட்டு வெளியேறியது, பொருளாதாரம் மேம்பட்டு விட்டது, பல கோடி வேலைகள் வந்துவிட்டன, உழவர்கள்- வர்த்தகர்கள் அனைவரும் லாபத்தை ஈட்டியுள்ளனர், ஸ்வச் பாரத், டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. நாட்டில் ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே உள்ளது, அது சுஷாந்த் வழக்குதான். மத்திய அரசும், ஊடகங்களும் 24 மணி நேரம் இதற்காகவே வேலை செய்கின்றன "என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

ஜூன் 14 அன்று நடிகர் சுஷாந்த் இறந்ததிலிருந்து, அவரின் மரண வழக்கு தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. முன்னதாக சனிக்கிழமையன்று, ரியாவின் தந்தை இந்திரஜித் எனும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பேசுகையில் "வாழ்த்துக்கள், இந்தியா. நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள், என் மகள் அடுத்த வரிசையில் இருப்பதை நான் நம்புகிறேன். நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட சிதைத்துவிட்டீர்கள். ஜெய் ஹிந்த், ”என்று கூறியிருந்தார்.