இந்தியா

மக்கள் கைகளில் நேரடியாகப் பணம் வழங்கப்பட வேண்டும்” - ராகுல் காந்தி வலியுறுத்தல்

PT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மீண்டும் மறு பரிசீலனை செய்து மக்களின் கைகளில் நேரடியாகப் பணத்தை வழங்குவது பற்றி யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,“ நான் அரசியலுக்காகப் பேசவில்லை, இந்தியர்களுக்காகப் பேசுகிறேன். அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மோசமானதில்லை என்றாலும் மக்களிடையே நேரடியாகப் பணத்தை வழங்குவது குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும்”எனக் கூறினார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையைத் தாய் - சேய் உறவுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி “ஒரு தாயோ தந்தையோ இது போன்ற  சூழ்நிலையில் தனது குழந்தைகளுக்குக் கடன் சலுகைகளை வழங்கமாட்டார்கள். அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு காரணங்களுக்காகப் பணத்தை வழங்குவார்கள். ஒன்று அன்பு. மற்றொன்று அவர்கள் எதிர்காலம். அந்த வகையில் பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு உதவுவது அரசின் கடமை என்று அவர் பேசினார்.

மேலும் பேசிய அவர் “ வெளிமாநில தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு இந்தச் சமயம் கடன் தேவையில்லை என்றும் அவர்களின் தேவை பணம் மட்டும்தான். ஆகவே மதிப்பிற்குரிய மோடி அவர்கள் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தை வழங்குவது குறித்து யோசிக்க வேண்டும். கிட்டத்தட்ட 200 நாட்களாவது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்.

அரசாங்கம் மக்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தாததற்குக் காரணம் ரேட்டிங் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இதில் இந்தியா பிற நாடுகளைப் பின்பற்ற வேண்டும். அரசு இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் செயல்பட்டால்தான் இந்தியாவின் ரேட்டிங் உயரும்” என்று அவர் பேசினார்.

முன்னதாக இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ராகுல் காந்தி முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனுடனும், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.