இந்தியா

’இப்பவும் போதையா?’ திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விவாகரத்து!

webteam

தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே திருமணம் முறிந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்துள்ளது.

வடமாநில திருமணங்களில் பாடலும் ஆடலும் முக்கியமான ஒன்று. அங்கு பெரும்பாலும் பாம்பு டான்ஸ் இடம்பெறுவது வழக்கம். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இணைந்து நடனம் ஆடுவார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த வெள்ளிக்கிழமை திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிப்ளமோ படித்த பெண்ணுக்கும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவருக்கும் திருமணம். சொந்தங்கள் கூடி நிற்க, இவர்களுக்கு திருமணம் நடந்தது. கழுத்தில் மாலையை மாற்றிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, மணமகனை அவரது நண்பர்கள் பாம்பு நடனம் ஆட அழைத்துச் சென்றனர். அப்போதுதான் அவரைக் கவனித்தார், மணப்பெண். மாப்பிள்ளை போதையில் தள்ளாடியபடி விழுந்து எழுந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.

இதனால் வெறுப்படைந்த மணமகள், உடனடியாக திருமணத்தை நிறுத்தினார். ’தாலி கட்டும்போது கூட தண்ணி போட்டுட்டுதான் வருவியா?’ என்று கேட்ட மணப்பெண், ’உன்னோட இனி வாழ முடியாது’ என்று சினிமாவில் வருவது போல மாலைகளை கழற்றி வீசினார். 

ஆவேசமடைந்த போதை மணமகன், மணமகளை அடிக்க, ரணகளமானது கல்யாண வீடு. போலீசார் வரவழைக்கப்பட்டனர். ’நாங்களே பேசித் தீர்த்துக் கொள்கிறோம்’ என்று இரண்டு குடும்பத்தினரும், புகார் ஏதும் கொடுக்கவில்லை. மணமகள் தரப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து சீர்களையும் மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துவிட, மணப்பெண் குடும்பத்தினர் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.