இந்தியா

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

webteam

மீடூ புகார் விவகாரத்தின் எதிரொலியால் மார்கழி இசைக்கச்சேரியில் கர்நாடக இசைக்கலைஞர்கள் 7 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

மீடூ விவகாரம் உலக அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறை நடிகைகள் உட்பட பல பிரபலமான பெண்களும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகின்றனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த மீடூ புகாரால் இந்த விவகாரம் தமிழகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடக இசைச் சங்கத்தின் முன்னணி இசைக்கலைஞர்கள் சிலர் மீது மீடூ ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் அச்சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் புகாரில் இசைக்கலைஞர்கள் என். ரவிகிரண், ஒ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், ஆர்.ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் தற்போது மெட்ராஸ் இசை அகாடமியால் நடத்தப்படும் உலக புகழ்பெற்ற மார்கழி இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மெட்ராஸ் இசை அகாடமி தலைவர் முரளி, “மீடூ விவகாரத்தின் எதிரொலியால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தக் கலைஞர்கள் அனைவரது பெயர்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. சில சமயங்களில் மீடூ தவிர்த்தும் சில பாலியல் புகார்கள் வந்துள்ளன. அவற்றுடன் தற்போது மீடூ புகாரும் வந்துள்ளது.
 
இசைத்துறையில் உள்ள நடுநிலையானவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு அகாடமி என்பதால், இந்த விவகாரத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் எங்களை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. அவர்கள் குற்றவாளிகள் என்று நான் கூறவில்லை. ஆனால் எங்கள் கச்சேரிகளில் யார் பங்கேற்க வேண்டும்? யார் பங்கேற்க வேண்டாம்? என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.