இந்தியா

“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்  

“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்  

webteam

சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய தாயைப் போன்றவர் என பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை ஆன ஹமிது நேஹல் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரி என்பவர், தன் சமூக வலைத்தள தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கிய அவரை உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் கைது செய்தனர். 

போதிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்து, உளவு பார்க்கவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வந்ததாகக் கூறி, ராணுவ நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு அவருக்கு 3 வருட சிறை தண்டனையை வழங்கியது. 2012-ல் இருந்து அவர் ஏற்கனவே 3 வருடம் சிறையில் இருந்துள்ளார். மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

இந்நிலையில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மாவின் தீவிர நடவடிக்கையால் ஹமிது அன்சாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியதுமே சுஷ்மாவைச் சந்தித்த ஹமீது, ''நான் விடுதலையானது எல்லாமே உங்களால் தான் நடந்தது'' என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

இந்நிலையில் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹமிது, சுஷ்மா தன் தாயைப் போன்றவர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், '' நான் ஆழ்ந்த இரங்கலை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் என்றுமே என் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவர் என் தாயைப் போன்றவர். நான் பாகிஸ்தானில் இருந்து வெளிவரவும், வெளிவந்த பின்னும் பல வழிகளில் எனக்கு உதவி செய்தார். அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய இழப்பு’’ எனத் தெரிவித்துள்ளார்.