இந்தியா

பஞ்சாப் நில பாதுகாப்பு சட்டத்திருத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

webteam

ஹரியானா அரசு கொண்டுவந்த ‘பஞ்சாப் நில பாதுகாப்பு சட்டத்திருத்த’தை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

ஹரியானா சட்டமன்றம் கடந்த புதன்கிழமை பஞ்சாப் நில பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. அதன்படி காடுகள் நிறைந்த அரவல்லிஸ் மலைப்பகுதியிலுள்ள 60 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேலான பகுதிகளில் வீடு கட்டுவதற்கு அனுமதியளித்தது. இதனால் அங்குள்ள காட்டு பகுதிகள் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்த்த நிலையில் இயற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. உச்சநீதி மன்றம் அரவல்லிஸ் மலை சார்ந்த மற்றொரு வழக்கை விசாரித்த போது ஹரியானா சட்டமன்றத்தின் சட்டத்திருத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளது. அதாவது “சட்டமன்றம் எப்போதும் உச்சத்தில் இல்லை. சட்டத்தை திருத்தி அரவல்லிஸ் மலையிலுள்ள காட்டு பகுதிகளை அளிப்பது வருத்தமளிக்கிறது. இந்தச் சட்டத்திருத்தை ஹரியானா அரசு அமல்படுத்தக் கூடாது” என உச்சநீதிமன்றம் ஆணைப் பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே இந்த அரவல்லிஸ் மலை பகுதிகள் வீடுகள் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடையளித்திருந்தது. இதனை மாற்றியமைக்கவே ஹரியானா சட்டமன்றம் இச்சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.