பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ மேஜரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி ‘ஐ லவ் யூ’ எனக் கூறி கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். 40 உயிரிழந்த இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில், இந்திய பாதுகாப்புப் படையினர் சிலர் உயிரிழந்தனர். இதில் மேஜர் விபுதி ஷங்கர் தெளன்டியல் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் 55 குண்டுகள் முழங்க டெல்லியில் அடக்கம் செய்யப்பட்டது. மேஜரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரது மனைவி நிதிகா கவுல் (27) கவலையுடன் இருந்தார். அப்போது சிரித்தபடி இருந்த மேஜரின் புகைப்படத்தை பார்த்த அவர், ‘ஐ லவ் யூ’ என்று உருக்கமாக கூறிய படி, முத்தமிட்டார். இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கவுல் பேசும் போது, “நான் உதவியற்ற நிலையில் இல்லை. எனது கணவர் ஒரு வீர இதயம் கொண்டவர்” என்று கூறினார். கவுல் டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.