இந்தியா

’நான் உண்மையான இந்தியன்’: வெளிநாட்டவர் எனக் கூறப்பட்ட கார்கில் வீரர் பேட்டி

’நான் உண்மையான இந்தியன்’: வெளிநாட்டவர் எனக் கூறப்பட்ட கார்கில் வீரர் பேட்டி

webteam

’’என்னை வெளிநாட்டுக்காரர் என்று கைது செய்வார்கள் என ஒரு போதும் நினைத்ததில்லை’’ என்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள அசாமைச் சேர்ந்த கார்கில் வீரர் தெரிவித்துள்ளார். 

அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதால் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், கவுகாத்தி, சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்பவர் வெளிநாட்டை (பங்களாதேஷ்) சேர்ந்தவர் என சந்தேகம் இருப்பதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், அசாம் எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவரது குடியுரிமை தொடர்பான வழக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாயம் விசாரித்தது. இறுதியில், முகமது சனாவுல்லா வெளிநாட்டுக்காரர்தான் என தீர்ப்பாயம் உறுதி செய்து, கைது செய்தது. பின்னர் தடுப்பு முகாமுக்கு அனுப்பியது. தடுப்பு முகாமில் சனாவுல்லா அடைக்கப்பட்டதை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் அவர் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்றம் சனாவுல்லாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

தலா 20,000 ஆயிரம் வீதம், இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கு முடியும் வரை, மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.மேலும், இந்த வழக்கில், பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசு, வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம், தேர்தல் ஆணையம் மற்றும் சனாவுல்லா வழக்கை விசாரித்த அதிகாரி ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

(குடும்பத்தினருடன் சனாவுல்லா)

ஜாமினில் விடுதலையான சனாவுல்லா, அளித்த பேட்டியில், ’’என்னை வெளிநாட்டுக்காரர் என அறிவிப்பார்கள் என ஒரு போதும் நினைத்ததில் லை. ஏனென்றால் நான் உண்மையான இந்தியன். நாட்டுக்காக 30 வருடம் ராணுவத்தில் பணியாற்றிய எனக்கு இதுதான் கிடைத்தது என்று நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. ஆனால், எனக்கு நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 

தடுப்பு முகாமில் இருந்தபோது பலரைச் சந்தித்தேன். வெளிநாட்டுக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பலர் வயதான வர்கள். இது துரதிர்ஷ்டவசமானது. பலர் என்னை போலவே பாதிக்கப்பட்டவர்கள். இது முடிவடையாத தண்டனை. கொடுமையான வாழ்க்கை’’ என்றார்.