இந்தியா

‘வெட்கக்கேடான வடு’ - ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் வருத்தம்

‘வெட்கக்கேடான வடு’ - ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் வருத்தம்

webteam

நூறு வருடங்களுக்குப் பின்னர், ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர வரலாற்றில் இன்னும் ரத்தக்கறையாக படித்துள்ள சம்பவம் ஜாலியன்வாலா பாக் படுகொலைகள். இந்தக் கோர சம்பவத்தின் 100 ஆம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஜாலியன்வாலா பாக் படுகொலை அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது ஜாலியன்வாலா பாக் பூங்கா என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. 

பைசாகி பண்டிகை நாளன்று ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது, ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அப்போது மிரண்டு ஓடிய மக்கள் அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து சாக நேர்ந்தது. இந்தக் கொடூரமான சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் இறந்தனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 1650 தடவை சுடப்பட்டதாக கூறப்படுகிறது. 

பிரிட்டன் அரசின் கணக்குப்படி மட்டும் மொத்தம் 379 பேர் இந்தக் கோர துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். ஆனாலும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தேவை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி மிகப்பெரிய அளவிலே உயிர்ச் சேதம் ஏற்படுத்தியதாக ஜெனரல் டயர் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு இதுவரை வருத்தம் தெரிவிக்காமலிருந்து வந்தது. இருப்பினும், பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் 100ம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய தெரசா மே, ‘பிரிட்டன் - இந்தியா வரலாற்றில் வெட்கக்கேடான வடுவாக ஜாலியன்வாலா பாக் சம்பவம் உள்ளது. 

1997ம் ஆண்டு ஜாலியன்வாலா பாக்கிற்கு செல்வதற்கு முன்னாள் பேசிய நம்முடைய ராணி, இது இந்தியா உடனான நம்முடைய கடந்த கால வரலாற்றின் துன்பகரமான உதாரணம் எனக் கூறிருந்தார்’ என்று கூறினார். அதேபோல், பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பின், ஜாலியன்வாலா பாக் சம்பவத்திற்கு முழு மனதுடன் தெளிவாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமானமொரு சம்பவமாக ஜாலியன்வாலா பாக் படுகொலை அமைந்தது. இந்தப் படுகொலை சம்பவத்திற்கு பின்னர், ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக இளைஞர் பெருவாரியாக இந்தச் சம்பத்தின் தாக்கத்தினால் கிளர்ந்தெழுந்தனர். அப்படிப்பட்ட கொடூரமான சம்பவம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளது.