இந்தியா

சரத்பவார் தலைவராக இருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்போம் - சிவசேனா

சரத்பவார் தலைவராக இருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்போம் - சிவசேனா

Veeramani

காங்கிரஸ் இப்போது பலவீனமாக இருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே ஐ.மு.கூஏவின்(UPA) அடுத்த தலைவராக சரத்பவார் வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (யுபிஏ) அடுத்த தலைவர் பற்றிய யூகங்களுக்கு மத்தியில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் இந்தப் பதவியைப் பெறுவதைக் கண்டு தனது கட்சி மகிழ்ச்சியடைவதாகவும், ஆனால் அவர் அதை தனிப்பட்ட முறையில் மறுத்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. பவார் ஒரு பெரிய தலைவர். அத்தகைய திட்டம் வந்தால் நாங்கள் என்.சி.பி தலைவருக்கு ஆதரவளிப்போம். காங்கிரஸ் இப்போது பலவீனமாக இருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்தார்

இந்த யூகங்களுக்கு சரத் பவார் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் “ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக என்சிபி தலைவர் பொறுப்பேற்பது தொடர்பாக சில ஆதாரமற்ற ஊடக தகவல்கள் வெளிவருகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று என்சிபி செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே கூறினார். மேலும் "ஊடக தகவல்கள் மூலம் தற்போதைய விவசாயிகளின் போராட்டத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த சர்ச்சை கிளப்பப்படுவதாகத் தெரிகிறது," என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசாங்கத்தின் கூட்டாணியான சிவசேனா, அரசியலில் எதுவும் சாத்தியம் என்று கூறியதோடு, பவார் தேசிய அளவில் அரசியலில் வல்லவர் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. 74 வயதான சோனியா காந்தி யுபிஏ தலைவர் பதவியை கைவிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்திறன் காரணமாக ராகுல் காந்தி  கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை பிடித்தது. ஆனால், கடந்த இரண்டு முறை படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.