இந்தியா

“ப்ரனய்யை கொல்ல 1 கோடியா?” - கூலிப்படையுடன் அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம்

“ப்ரனய்யை கொல்ல 1 கோடியா?” - கூலிப்படையுடன் அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம்

webteam

தெலுங்கானாவின் நெலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகள் ப்ரனய் - அம்ருதா. இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். அம்ருதாவும், ப்ரனய்யும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் போராடி திருமணம் செய்து கொண்டனர். ப்ரனய் வீட்டார் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அம்ருதா கர்ப்பம் அடைந்த செய்தி கேட்டு பின்னர் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பெரிய அளவில் திருமண வரவேற்பு நடத்தினர். இந்த நிகழ்வுக்கு அம்ருதாவின் பெற்றோர்கள் வரவில்லை. 

இதனிடையே, கர்ப்பிணியான அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்காக நெலகொண்டாவில் தனியார் மருத்துவமனைக்கு ப்ரனய் அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.14) மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோதுதான் அம்ருதா கண் முன்னே ப்ரனய் மர்ம நபரால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தெலுங்கானாவையே உலுக்கியது. இதையடுத்து ப்ரனய்யின் தந்தை தரப்பிலிருந்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அம்ருதாவும் தனது தந்தைதான் குற்றத்தை செய்திருப்பார் என குற்றம்சாட்டினார். புகாரின் அடிப்படையில், விசாரணையின் அடிப்படையிலும் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அம்ருதா மாமா மற்றும் மற்றொரு நபர் உள்ளிட்ட 3 பேர் மீது, ஆணவக்கொலை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளியை தெலுங்கானா காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. அதன்படி, ப்ரனய்யை கொலை செய்ய ரூ.1 கோடியை கூலியாக வழங்க அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம் செய்துள்ளார். முகமது பரி என்பவரின் மூலம் கூலிப்படையை சேர்ந்த ஆஸ்கர் அலி என்பவர் மாருதி ராவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். ஆஸ்கர் அலி, ப்ரனய்யை கொலை செய்ய ரூ.2.5 கோடி கேட்டுள்ளார். ஆனால் மாருதி ராவ் தரப்பிலிருந்து ரூ.1 கோடி தருவதாக கூறியுள்ளனர். முதலில் ஜூன் அல்லது ஜூலையில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்தத் திட்டம்தான் பல்வேறு காரணங்களால் தற்போது நிறைவேறியுள்ளது. கொலை அரங்கேற்ற முன்பணமாக ரூ.50 லட்சத்தை கூலிப்படையினர் கேட்டுள்ளனர். ஆனால் ரூ.15 லட்சத்தை மாருதி ராவ்  வழங்கியுள்ளார். அன்றைய தினமே ப்ரனய்யின் வீட்டை, மாருதி ராவ் தரப்பினர் கூலிப்படையினருக்கு காண்பித்துள்ளனர். இதன்பின்னர் போட்ட திட்டத்தில்தான்  ப்ரனய் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

விசாரணைக்குப்பிறகு, இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி சர்வன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர முகமது பரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல் கரீம், சிவா, கூலிப்படையை சேர்ந்த ஷர்மா (பீகார்) உள்ளிட்டோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.