கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமாக 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை. பாஜக 104 இடங்களை கைப்பற்றிய போதும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அங்கு மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கர்நாடக அமைச்சர் ஷிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களை மும்பையில் பாஜக நிர்வாகிகளின் ஹோட்டலில் தங்க வைத்துள்ள அக்கட்சி அதன்மூலம் அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் சாடியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் குமாரசாமியும் இந்த விவகாரத்தில் பாஜகவிற்கு இணக்கம் காட்டும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு தெரிந்த உண்மைகளை குமாரசாமி வெளிப்படுத்த மறுப்பதையே இணக்கம் என குறிப்பிடுவதாகவும் கூறியுள்ள ஷிவகுமார், அனைத்து எம்எல்ஏக்களும் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் குமாரசாமியிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற கொள்கை முடிவில் குமாரசாமி இருக்கிறார் என்றும், தான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் 24 மணி நேரத்திற்குள் அனைத்து விஷயங்களையும் அம்பலப்படுத்தியிருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் பாஜக தன் முயற்சியில் தோல்வியையே தழுவும் எனவும் ஷிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான புகார் அளித்தும் கூட, வருமான வரித்துறையும், ஊழல் எதிர்ப்பு பிரிவும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஷிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே பாஜக சேர்ந்தவர்கள் தங்களை அணுகுவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேசமயம் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. கூட்டணி ஆட்சியில் இருக்கும் குறைகளை மறைக்க, எதிர்க்கட்சிகளை தேவையில்லாமல் குற்றம்சாட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.