சோழர்கள் மாளிகைமேடு pt web
இந்திய பாரம்பரிய இடங்கள்

மணல்மேடான ராசேந்திர சோழன் மாளிகை.. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அற்புதங்கள்; சீனாவின் தொடர்பு எப்படி?

அரியலூர் - மாளிகைமேடு 3 ஆம் கட்ட அகழ்வாராட்சியில் பதினோராம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சீன பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடு மண்ணால் ஆன முத்திரை தரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

ஒரே குடையின் கீழ் தமிழ் நிலப்பரப்பு.. உச்சம் தொட்ட சோழர்கள்! 

பண்டைய தமிழ்நாட்டை பல்வேறு மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சோழர்கள் அதிகமாக நினைவு கூறப்படுகின்றனர். கிபி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ஆனால், ராஜராஜ சோழனின் மகன் ராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியமைத்த பின் பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகராக விளங்கியது.

பல்வேறு குழுக்களாக இருந்த தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் கொண்டுவந்தனர். இருப்பினும், சோழர்கள் காலத்தில் தமிழ் நிலப்பரப்பு ஒரே குடையில் கீழ் முழுமுழுக்க அனைத்து அம்சங்களிலும் வந்து சேர்ந்தது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ராஜ ராஜனை தொடர்ந்து ராசேந்திர சோழன் காலத்தில் அது உச்சம் தொட்டது.

கங்கை கொண்ட சோழபுரம் பெயர் வந்தது எப்படி?

எப்படி சோழர்களின் தலைநகர் தஞ்சாவூரில் இருந்து கங்கை கொண்டசோழ புரமாக மாறியது என்பதை, யூகமாக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் சரித்திர நாவலில் கதை மாந்தர்களின் உரையாடல் வழியே தெரிந்துகொள்ளலாம்.

சோழர்கள்

அதேபோல் கங்கை வரை சென்று வெற்றி பெற்ற ராசேந்திர சோழன் வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரையும், கங்கை கொண்ட சோழீஸ்வரம் என்ற கோயிலையும், சோழகங்கம் என்ற ஏரியையும் இங்கு ஏற்படுத்தினார். தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம் ஆன பின்பு பெரிய அரண்மனை ஒன்றையும் ராசேந்திர சோழன் உருவாக்கினார்.

மாளிகை மேடு பகுதியில் தொடரும் அகழ்வாராய்ச்சி பணிகள்

காலப்போக்கில் இந்த மாளிகை அழிந்து மண்மேடாகி பின்னாட்களில் மாளிகைமேடு என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் 1980 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது. அப்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கங்கைகொண்ட சோழ புரத்தில் உள்ள காப்பகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு மற்றும் 2000 ஆண்டுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு, கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், சிவப்புப் பானை ஓடுகள், ரௌலட்டட் பானை ஓடுகள், எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் உஜ்ஜயின் குறியீடு கொண்ட செப்புக் காசு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

மாளிகைமேடு

இதன் பின் 2020- 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிகளில் மூன்றடுக்கு செங்கல் சுவர்கள் உட்பட பல்வேறு கட்டுமானப் பணிகளும் கண்டெடுக்கப்பட்டது.

சீன பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு.. 3ஆவது அகழ்வாராய்ச்சி கிடைத்த பொருட்கள்

இந்நிலையில் அரியலூர் - மாளிகைமேடு 3 ஆம் கட்ட அகழ்வாராட்சியில் பதினோராம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சீன பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடு மண்ணால் ஆன முத்திரை தரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழக அரசின் உத்தரவுன்படி தொல்லியல் துறை சார்பில் 3 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வரும் நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்க அச்சு, சுடுமண்ணால் ஆன முத்திரை என பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலவாணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அச்சு சாலைகள் அமைந்திருந்ததையும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள சீன பீங்கான் துண்டு 3 செமீ நீளமும் 2.5 சென்டிமீட்டர் விட்டமும் உள்ளது.

சீன பீங்கான்

தற்பொழுது அகழ்வாராய்ச்சி பணியானது 16 குழிகள் அமைக்கப்பட்டு 21 பணியாளர்கள் கொண்டு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 461 பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

சீனா உடனான சோழர்களின் தொடர்பு

தென்னிந்தியாவையும் இலங்கையில் சில பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வந்த்திருந்த சோழர்கள், சீனாவில் சோங் வம்சத்தின் (960-1279) ஆட்சியின் போது சீனாவுடனும் சில வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என வரலாற்று ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தரவுகளின் படி சோங் வம்ச காலத்தில் சோழர்கள் சீனாவில் பல சிவாலயங்களை கட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் கடல்சார் வர்த்தக வழிகள் மூலம் சீனாவுடன் வாசனைப் பொருட்கள், ஜவுளிகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்ற பொருட்களை வர்த்தகம் செய்தனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சீனர்களுடனான சோழர்களின் உறவு அவர்களது தெற்காசிய மன்னர்களுடன் இருந்த உறவை போல் முழுமையானதாகவோ அல்லது நெடுநாட்களோ இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க யுவான் சுவாங் கிபி 629 ஆம் ஆண்டில் தனது இந்திய பயணத்தை தொடங்கினார். தனது பயணத்தின் போது அவர் காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பகுதிகளையும் பார்வையிட்டார். இதன் மூலம் இந்திய - சீனா இடையேயான தொடர்பு பல்லவர் காலத்தில் இருந்தே இருந்துள்ளது தெரிய வருகிறது.