The Oval Twitter
Cricket

தொடக்கத்திலே லபுசங்னேவின் விக்கெட்டை இழந்த ஆஸி.. போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் யாருக்கு சாதகம்?

இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்சில் எடுத்தது.

சங்கீதா

இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்சில் எடுத்தது.

இதனால் 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்திருந்தது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட், 34 மற்றும் 18 ரன்கள் முறையே ஜடேஜாவின் சுழலில் சிக்சி அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள் தொடங்கியதுமே லபுசங்னேவின் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக வானம் தெளிவாக இருந்த நிலையில், இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அங்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் (இங்கிலாந்து நேரப்படி) மழைபெய்ய வாய்ப்பில்லை என்றும், எனினும் மதிய நேரத்திற்குப் பிறகு இது மாறலாம் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, வானிலை நிலவரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை, 43 முதல் 47 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புண்டு.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மழை பெய்ய அதிகளவில் வாய்ப்புள்ளது. 1 முதல் 2 மணி நேரம் வரையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல் செஷனின்போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது செஷனின் போது மழை பெய்யவோ அல்லது தூறல் போடவோ வாய்ப்புண்டு. அதேபோல், நாளையும் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, தற்போது உள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணியை விரைவில் ஆல் அவுட் செய்துவிட்டால் மீதமுள்ள நாள் முழுவதும் இந்தியாவுக்கு கிடைக்கும். மழை குறுக்கிட்டால் இந்தியாவுக்கான நேரம் குறைய நேரிடம். நெருக்கடி உருவாகும். 350 ரன்களுக்கு மேல் எப்படியும் அடிக்க வேண்டியிருக்கும்.