முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையை சேர்ந்த பாரதி என்ற சிறுமிக்கு, ரூ.16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்க வசதியின்றி தவித்து வரும் குழந்தையின் பெற்றோர், இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர், ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி, ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்டாக பணியாற்றி வருகிறார். இவர்களது இரண்டு வயது மகள், பாரதி. இந்த சிறுமிக்கு தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் பல்வேறு சிகிச்சைகள் செய்தும் சரியாகாமல் இருந்துள்ளது.
இதையடுத்து சிறுமிக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனையொன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதியன்று வந்த பரிசோதனை முடிவில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் சிறுமிக்கு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. சிறுமி இதுவரை தவழ்ந்த நிலையில், தானாக எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்து வருகிறார்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு, 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும், மருந்தின் விலை 16 கோடி ரூபாய், அதை இறக்குமதி செய்ய வரி 6 கோடி என மொத்தம் 22 கோடி ரூபாய் செலவாகும் என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெற்றோர்கள், முன்னதாக
கோவையை சேர்ந்த மித்ரா என்ற சிறுமிக்கு ஏற்கனவே தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டபோது, அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெங்களூரு மருத்துவமனையில், கடந்த நான்கு நாளாக சிறுமி பாரதியை அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து குழந்தையின் தந்தை ஜெகதீஷ் கூறுகையில், “இயற்கையாக புரோட்டீன் சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்து விலை 16 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது. தற்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் 60 லட்சம் தான் கிடைத்துள்ளது. நண்பர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பொதுமக்களிடமும் உதவி கேட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஊசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
ஊசி செலுத்தவில்லை என்றால் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்து போகும் என கண்ணீர் சிந்துகின்றனர் குழந்தையின் பெற்றோர்கள். தமிழக முதல்வர் தங்கள் குழந்தை மீது கருணை காட்டி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.பொதுமக்கள் இவர்களுக்கு உதவிகள் வழங்க, 97917 9345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.