இன்று உலக தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய அரும்பணிகள்தான்.
காரணம், ‘பாவச்செயலின் விளைவால் பிறந்தது தொழுநோய்’ என்று காலங்காலமாக சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தெரிந்துவிட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு தனது அன்புக்கரம் மூலம் அரவணைத்த உன்னத உள்ளமாக திகழ்ந்தவர் அன்னை தெரசா.
தொழுநோய் என்பது பெரிய வியாதி அல்ல. உண்மையில் அது குறித்த எண்ணம்தான் மனிதர்களைத் தேவையில்லாமல் கவலை கொள்ள வைக்கிறதுஅன்னை தெரசா
1873-இல் டாக்டர் கெரார்ட் ஹேன்சன் என்பவர்தான் தொழுநோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் கண்டறிந்தவர். அதனாலே, இது ஹேன்சன் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இதனை ஒழிப்பதற்கு என்று 1898 இல் சட்டம் இயற்றப்பட்டது.
1955-இல் இந்திய அரசால் தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டது. WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தபடி, தொழுநோய்க்கு பன்மருந்து சிகிச்சை 1982-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இத்திட்டமானது, NLEP எனப்படும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டமாக மாற்றப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அது உண்மைக்கு மாறானது என்று பிறகுதான் தெரியவந்தது.
என்னதான் தொழுநோய் ஒழிப்பில் NLEP திட்டத்தின் மூலம் தீவிரம் காட்டினாலும், உலகத்திலுள்ள தொழுநோயாளிகளில் 57 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று சில தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 2017 கணக்கெடுப்பின்படி, 682 மாவட்டங்களில் 554 மாவட்டங்கள் தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்துவிட்டன என்று தெரிகிறது.
கிருமிகளின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை பொறுத்து,
குறைவான கிருமிகள் ஆட்கொண்ட தொழுநோய் (Paucibacillary)
அதிகமான கிருமிகள் உட்கொண்ட தொழுநோய் (Multi bacillary)
என்று பிரிக்கிறார்கள் மருத்துவ உலகினர். மேலும் தொழுநோயை மல்டிட்ரக் தெரபி (MDT) மூலம் குணப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழுநோய் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் வாய் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறும் எச்சில் மூலமாக பரவும் சரும நோயாகும். தொழுநோயாளியை தொடுவதால் இந்நோய் பரவாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோயை உருவாக்குவது "மைக்கோ பேக்டீரியம் லெப்ரே" எனும் பாக்டீரியா.
இந்தக் கிருமி உடலுக்குள் நுழைந்து நோய் வரவழைக்க எடுத்துக்கொள்ளும் காலம் (Incubation Period) சராசரியாக ஐந்து ஆண்டுகள். இந்தக் காலம் ஒரு ஆண்டு முதல் இருபது ஆண்டுகள் வரை கூட இருக்கலாம். இந்த நோய் தோல், நரம்புகள், மேல் சுவாசப்பாதையின் சளிப்படலம், கண்கள் போன்றவற்றை தாக்கும் தன்மை கொண்டது.
வேறு எந்தநோய்களுக்கும் இல்லாத அளவிற்கு காலம்காலமாக வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் உள்ளாவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தொழுநோய் முந்தைய ஜென்மத்தின் பாவங்களால் வருவது அன்று. ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு கிடைத்த சாபமும் அன்று. இது ஒரு பாக்டீரியாவால் உருவாகும் தொற்று நோய். இதுவே அறிவியல் சார்ந்த உண்மை கூட.
தொழுநோய் குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே சமீபத்தில் தெரிவிக்கையில், “தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. ஜன. 30-ம் தேதி (இன்று) மாவட்டம் முழுவதும் அனைத்துக்கல்வி நிலையங்கள், மாவட்ட, வட்ட மருத்துவமனைகள், அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும்.
மேலும் தோல்கிசிக்கை முகாம்கள் , தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள் 2 வாரங்களுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் பொது இடங்களில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படவுள்ளது. சென்னையில் 10,000 மக்கள் தொகைக்கு நோய் பரவுதல், 0.15 விகிதமாக உள்ளது. இதை, 2027 ஆண்டிற்குள், தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தொழுநோய் என்பது முற்றிலும் குணமாகக்கூடிய நோய் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கான சிகிச்சை முறை அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழுநோயின் பெயரால் ஏற்படும் தீண்டாமைகளையும், வெறுப்பினையும் தகர்த்து அவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் உருவாக வேண்டும். அவர்களுக்கு தேவையெல்லாம், உரிய சிகிச்சை மட்டுமே. அப்போதுதான் தொழுநோய் இல்லாத சமுதாயம் உருவாகும். அதை முன்னெடுக்க, நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்று ஒன்றிணைவோம்.!