ஹெல்த்

வெயில் சீஸனில் மாம்பழம் சாப்பிடுவது ஏன்?

Sinekadhara

வெயில்காலத்தை மாம்பழ சீஸன் என்றும் அழைக்கிறோம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர் வெகுசிலரே. இந்தப் பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் மாம்பழத்தில் நிறைந்துள்ளதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தங்கள் டயட்டில் எவ்வித தயக்கமுமின்றி சேர்த்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது!

மாம்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஓர் உணவு. எனவேதான் நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது.

மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மாம்பழத்தை தினசரி எடுத்துக்கொள்ளலாம். இதில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் எடையைக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீண்டநேரத்திற்கு பசி உணர்வு இருக்காது.

பிசிஓடி பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்தது!

மாம்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. மாதவிடாய் மற்றும் பிசிஓடி பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்னை உள்ளவர்களும் சாப்பிடலாம்!

மாம்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் மக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது.

செரிமானத்தை சீராக்கும்!

மாம்பழத்தில் நார்ச்சத்து அதிமாக உள்ளதால் செரிமான கோளாறுகளை சரிசெய்யும். செரிமான உறுப்புகளை சீராக இயக்கி மலச்சிக்கலை தடுக்கும். இதில் செரிமான என்சைம்கள் அதிகமாக உள்ளன.

சரும பிரச்னைகளுக்கு தீர்வு!

மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிமாக உள்ளதால் சருமத்திற்கு சிறந்த நண்பன் என்றும் சொல்லலாம். முகப்பரு மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். இது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

எப்போது சாப்பிடலாம்?

மாம்பழத்தை அரைமணிநேரம் முன்பு நீரில் ஊறவைத்துவிட்டு உணவு சாப்பிடுவது சிறந்தது. காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் மாம்பழம் சாப்பிடுவதே செரிமானத்தைத் தூண்டும். எனவே மாம்பழ சீஸனை மிஸ் பண்ணவேண்டாம்!