ஹெல்த்

உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...

உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...

Sinekadhara

வெப்பம் அதிகமாக இருந்தாலோ அல்லது உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்தாலோ வியர்ப்பது சகஜம்தான். அதேபோல் உடலின் வெப்பநிலை உயரும்போது அதனைத்தொடர்ந்து குளிர்வது என்பது இயற்கையான ஒரு நிகழ்வு.

வியர்வையில் சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற உப்புகளுடன் தண்ணீர் அடங்கியுள்ளது. வியர்வையானது உடலின் வெப்பநிலையை பராமரிக்க உடலில் இருந்து வெப்பத்தை வெளியிடுகிறது. வியர்க்கும்போது துர்நாற்றம் வருகிறது என்றால் உடலிலிருந்து உப்பை இழக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படி உப்பை இழக்கும்போது உடலுக்கு உடனடியாக நீரேற்றம் தேவைப்படும். இல்லாவிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதை மறக்கவேண்டாம்.

ஏன் சிலருக்கு அதிகமாக வியர்க்கிறது?

சற்று வெப்பநிலை அதிகரித்தாலே சிலருக்கு அதிகமாக வியர்ப்பதாகக் கூறுவர். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

உடல் அளவு: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே அதிகமாக வியர்க்கும்.

உடற்கட்டமைப்பு: தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டில் ஈடுபடுபவர்கள், அதிக இயக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்தே இருப்பவர்களைவிட அதிகமாக வியர்க்கும்.

வயது காரணி: வயதுக்கு ஏற்றவாறு வியர்வை சுரப்பிகளின் தன்மையும் மாறுபடும். குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு அதிகம் வியர்ப்பது சகஜம்தான்.

உடல்நிலை: ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல்நிலையை பொருத்து வியர்க்கும் தன்மையும் மாறுபடும். சளி மற்றும் இருமலுக்கு மாத்திரை மருந்து சாப்பிடுபவர்களுக்கு அதிகம் வியர்க்கும். அதேபோல் மன அழுத்தம் மற்றும் அதீத கவலை உள்ளவர்களுக்கும் அதிகம் வியர்க்கும். மேலும் ஹார்மோன் குறைபாடு மற்றும் மாற்றம் உள்ளவர்களுக்கும் அதிகம் வியர்க்கும்.

அதீத வியர்வை உடலை வறட்சியாக்கும். எனவே நிறைய நீராகாரங்கள் மற்றும் தண்ணீர் அருந்துவது அவசியம். குறிப்பாக சூடான காலநிலை மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் நீராகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வியர்ப்பது நல்லதுதான் என்றாலும், பெரும்பாலானவர்கள் அதை விரும்புவதில்லை. எனவே அவர்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் டியோடரண்டுகளை வாங்கி பயன்படுத்தி வியர்வை மற்றும் துர்நாற்றத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்.