கொசுக்கடி Facebook
ஹெல்த்

உங்களை கொசு கடிச்சுட்டே இருக்குதா? அப்போ இதுதான் காரணம்!

கொசுக்கள் கடிப்பது ஏன்? மனித ரத்தத்தில் இருந்து அதற்கு கிடைப்பது என்ன? ‘உன்ன மட்டும் கொசுக்கடிக்கல....ஆனா, என்ன மட்டும் கடிக்குதே..” இப்படி எல்லா சந்தேகத்திற்கும் பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவித்த... தவிர்க்க முடியாத ஒரே விஷயம் என்றால் அது கொசுக்கடி. பார்ப்பதற்கு என்னவோ, சிறியதுதான் ஆனால், காட்டும் வேலை என்னவோ ஒரு ஆளையே கொன்றுவிடும் அளவிற்கு டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, ஜிகா வைரஸ் என பல நோய்கள், தொற்றுக்களை உண்டாக்கிவிடும் அளவிற்கு அபாயத்தை உண்டாக்கும்.

கொசுக்கள் கடிப்பது ஏன்? மனித ரத்தத்தில் இருந்து அதற்கு கிடைப்பது என்ன? ‘உன்ன மட்டும் கொசுக்கடிக்கல....ஆனா, என்ன மட்டும் கடிக்குதே..” இப்படி எல்லா சந்தேகத்திற்கும் பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கடிப்பதற்கான காரணங்கள் என்ன?

ஆண் கொசுக்களை பொறுத்தவரை பூக்களில் உள்ள தேனில் இருந்து உணவை பெற்றுக்கொள்கிறதாம்..ஆனால், பெண் கொசுக்களை பொறுத்தவரை மனிதர்களை கடித்து அதிலுள்ள புரதத்தை தனது முட்டை உற்பத்திக்கு பயன்படுத்தி கொள்கிறதாம்.

கர்ப்பக்காலம்

பெண்களின் கர்ப்பக்காலத்தில், அவர்களின் உடலில் நிறைய வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதனால், உடல் வெப்பநிலை மாற்றம் ஏற்படுகிறதாம்.. மேலும் , சுவாசிக்கும் திறன் அதிகமாவதால் அதிகளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. இந்த கார்பன்டை ஆக்ஸைடு அதிகளவு வெளியேறி கொசுக்களை ஈர்த்து கடிப்பதற்கு காரணமாக அமைகிறது.

ஆடை:

கொசுக்களுக்கும் ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பொதுவாக வெளிர்நிற ஆடைகளைவிட அடர் நிற ஆடை அணிபவர்களை கொசுக்கள் விடுவதில்லை. டெங்கு கொசுக்கள் கைகளையும், மலோரியா கொசுக்கள் காதுகளையும் கடிப்பதால் உடைகள் அணியும்போது கவனமாக அணிய வேண்டும்.

வியர்வை:

வியர்வை நாற்றம் கொசுக்களுக்கு வாசனையாம். உடலிருந்து வெளியேறும் வியர்வையின் நாற்றம் ஆளுக்கு தகுந்தாற்போல மாறுகிறது. அதில், ஒருசில வியர்வை நாற்றம் பெண் கொசுக்களை அதிக அளவில் ஈர்த்து விடுகிறதாம். ஆகையால், இதுவும் கொசு கடிப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

மது பழக்கம்

மதுபழக்கம் உடையவர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிக்கும். வளர்ச்சிதை மாற்றம் உண்டாகும். இதனால், அதிகரிக்கும் உடல் உஷ்ணம் கொசு கடிப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

ரத்த வகை

கொசுக்களை பொறுத்தவரை ஒரு சில ரத்தவகைகள் கொசுக்களை அதிகம் கவரும் தன்மை கொண்டது. அதிலும் ’ஓ’ பிரிவு ரத்தவகையினரை கண்டால் போதும்.. அவர்களை விட்டு பிரியவே பிரியாதாம்... இதற்கான காரணம் கொசுக்கள் விரும்பும் ஒருவகையான ரசாயனம் ’ஓ’ வகை ரத்த வகையினரிடம் இருப்பதால் , இவ்வகை ரத்தம் கொண்டவர்களை கொசுக்கள் அதிகளவு கடிப்பதாக கூறப்படுகிறது.