காலை உணவின் முக்கியத்துவம் File image
ஹெல்த்

குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு எவ்வளவு முக்கியம்? தவிர்த்தால் என்ன ஆகும்? - இது ’Breakfast' ஆலோசனை!

குழந்தைகளுக்கு காலை உணவு என்பது ஏன் அவசியமாகிறது, அதன் முக்கியத்துவம்தான் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

‘காலை உணவை ஏன் தவிர்த்தீர்கள்’ என பெரியவர்களை கேட்டால் ‘நேரப்பற்றாக்குறை, பிடிக்காத உணவு, லேட்டாதான் எழுந்தேன் பசிக்கல...’ இப்படி இன்னும் எக்கச்சக்க காரணம் சொல்வார்கள். ஆனால் குழந்தைகள்..?

இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகள் குடும்ப வறுமையாலேயே காலை உணவை தவிர்க்கிறார்கள். வறுமையில்லாத வீடுகளில், குழந்தையை பெற்றோர் பசியோடு பள்ளிக்கு அனுப்பமாட்டர்கள். வறுமையுள்ள வீட்டிலும்கூட, பசியோடு அனுப்பக்கூடாதென்றே நினைப்பர். குடும்ப வறுமையின் காரணமாக ஒரு நாளைக்கு தேவையான 3 வேளை உணவில், 1 வேளையை மட்டுமே பெறும் குழந்தைகள் நம்நாட்டில் ஏராளம்.

Food and plastics

இன்றைய தேதியில் இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடனேயே இருக்கிறார்கள். இதற்கும் காலை உணவை குழந்தை தவிர்ப்பதற்கும் நிறைய தொடர்புள்ளது.

’Breakfast'-ன்னு ஏன் பெயர் வந்தது?

‘Breakfast’ என்றால், Breaking the Fast. அதாவது வெகுநேரமாக வயிற்றை காலியாக வைத்திருப்பதை தவிர்த்து, உணவு உண்ண வேண்டும். என்ன வெகுநேரமாக சாப்பிடாமல் இருக்கிறோமா என்கின்றீர்களா? ஆம். அதுகுறித்து பார்ப்போம்.

குழந்தைகள் உடலில் காலை உணவு எப்படி வேலை செய்கிறது?

பெரியவர்களாகிய நாம், சரியான நேரத்தில் இரவு உணவு சாப்பிட்டோமென வைத்துக்கொள்வோம். அதன்பிறகு 8 - 10 மணி உறக்கம். எழுந்தபின்னும் 3 - 4 மணிநேரம் கழித்துதான் காலை உணவை எடுத்துக்கொள்கிறோம்.

காலை உணவின் மூலமாகதான் அன்றைய நாளுக்கான ஆற்றலையும், அந்நாளுக்கு தேவையான 1/3 சத்துக்களையும் நாம் பெற முடிகிறது. எனவே காலை உணவை உட்கொள்வது நமக்கே மிகவும் அவசியமானது. இதில் குழந்தைகளெனும்பட்சத்தில், அவர்கள் இன்னும் சீக்கிரமாக படுக்கைக்கு சென்று - அதிக நேரம் தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.

ஏன் முக்கியமாகிறது?

ஆக அவர்களுக்கு கிடைக்கும் Fasting நேரம், இன்னும் அதிகம். அப்போ அவங்களுக்கு Breaking the Fast, அதாங்க Breakfast எவ்ளோ முக்கியம்?! இவைபோக குழந்தைகளை பொருத்தவரை மூளையில் குளுக்கோஸை சேமித்துக்கொள்ளும் திறன் என்பதும் குறைவாகவே உள்ளது.

மூளைக்குத் தேவையான ஆற்றல் (energy) என்பது குளுக்கோஸ் மூலமாகத்தான் கிடைக்கும். பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு குளுக்கோஸ் தேவை அதிகம். இதற்கிடையே வெகுநேரம் சாப்பிடாமல் இருப்பதால், குழந்தைகளுக்கு காலை நேரத்தில் அதிக குளுக்கோஸ் தேவைப்படுகிறது. அதனால் காலை உணவு அவர்களுக்கு கட்டாயமாகிறது!

உடலுக்கு தேவைப்படும் ஆற்றல் சத்தான உணவின் மூலமே கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு சத்தான காலை உணவென்பதும் மிக முக்கியமானதாக அமைகிறது.

காலை உணவாக குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்?

காலை உணவில் அரிசி, கோதுமை, திணை போன்ற தானியங்களையும், புரதச்சத்தோடு சேர்ந்த உணவுகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. இத்துடன் பழ வகைகளும் உண்ணலாம். அன்றைய நாளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இயற்கையாக பெறப்படும் உணவுகளில் (காய்கறிகள், பழங்கள் மூலம்) இருந்து பெறுவது, உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

காலை உணவு எப்படி வேலை செய்கிறது?

குழந்தைகள், காலை உணவை தவிர்த்தால் என்ன ஆகும்?

  • உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போய் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும். இதனால் புத்துணர்ச்சியை இழப்பது, கவனச்சிதறல் போன்றவை அவர்களுக்கு ஏற்படும்.

  • நன்றாக படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் சோர்வுக்கு உள்ளாக்கி படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் தவிப்பர். இதே நிலைதான் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், முதியவர்களுக்கும். ஒரு நாள் புதிதாக, புத்துணர்ச்சியாக அமைய காலை உணவு என்பது அவசியம்.

  • சிறந்த IQ ஐ கொண்ட குழந்தையென்றாலும், காலை உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றலானது தவிர்க்கப்படும் போது குழந்தைகள் சோர்வடைந்து தாங்கள் செய்ய நினைக்கும் செயல்களைகூட சிறப்பாக செய்ய முடிவதில்லை.

  • காலை உணவை உண்ணும் குழந்தைகளை விட, காலை உணவு சாப்பிடாத குழந்தைகளே அடிக்கடி நோய்வாய்ப்படுவதால், பள்ளிகளுக்கு செல்லுவதும் தடையாகி அதிக விடுமுறை எடுத்துக்கொள்ளவும் வழிவகுக்கின்றது

ன்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
  • இதயம் தொடர்பான நோய்கள், உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள், தொடர்ந்து தலைவலி மற்றும் குமட்டல், வளர்ச்சி குன்றியிருப்பது, குறைந்த ஆற்றல் அளவுகள் மற்றும் ஸ்கர்வி, பெரிபெரி, பெல்லாக்ரா போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் ஆகியவையும் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுவதும் வேகமாக செயல்படுவதோடு மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதனாலேயே மற்ற நேர உணவுகளை காட்டிலும் காலை உணவு மனித உடல் திறம்பட செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.!