ocd pt web
ஹெல்த்

OCD பிரச்னை: யாருக்கெல்லாம் வரலாம்? சரிசெய்வது சாத்தியமா?

Angeshwar G

பரபரப்பான வாழ்க்கையில் இருக்கும் அனைவரும் பதற்றம் மற்றும் அழுத்தம் இரண்டையும் கையாள கற்றுக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிகமாக பதற்ற நிலையில் இருப்பது பலவித பிரச்னைகளை கொண்டு வந்துவிடும். பின் அதை கையாள்வது இன்னொரு சிக்கலாகிவிடும். இதிலும் சிலர், ‘நமக்கு வரும் பதற்றம் ஒரு பிரச்னைதான்’ என்றே தெரியாமல் இருப்பர். அப்படி பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ‘இது ஒரு பிரச்னையா’ என்பது தெரியாமலேயே நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் பிரச்னைதான் OCD.!

இது குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக சென்னையில் Bliss Mind Careன் மனநல மருத்துவர் சுவாதிக்கை தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “OCD (Obsessive-compulsive disorder). இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் பதற்ற நிலையில் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இதனை எண்ணப் பிறழ்வு நோய் என்று சொல்வோம். இப்படியானவர்களுக்கு தேவையில்லாத எண்ணங்கள், பிடிக்காத எண்ணங்கள், அச்சங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். அந்த பயத்தையும் அருவருப்பையும் போக்குவதற்கு அவர்கள் எதாவது ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். அது சில நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் அதிகபட்சமாகவும் இருக்கும்.

பொதுவாக அதிகளவில் இருக்கும் OCD, cleanliness OCD. உதாரணமாக, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கை கழுவிக்கொண்டே இருப்பார்கள். அடிக்கடி கைகழுவது ஓரளவுக்கு சரி என்றாலும் கூட அவர்கள் கைழுவும் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

மருத்துவர. சுவாதிக்

கை அழுக்காக இருக்கிறது என்ற எண்ணம் ஒருவருக்கு இருந்தால் ஒவ்வொரு நேரமும் அது அதிகரித்துக்கொண்டே இருக்கும். கை அழுக்காக இருந்தால் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இதனால் வியாதி ஏதும் வந்துவிடுமோ என பயப்படுவார்கள். அந்த பயத்தினால் அவர்கள் அடிக்கடி கை கழுவுவார்கள். அப்படி கழுவினாலும் அவர்களுக்கு திருப்தியே இருக்காது. ஒருவேளை நான் சரியாக கழுவாமல் இருந்தால் என்ன செய்வது என்பன போன்ற எண்ணங்கள் மீண்டும் வரும்.

சரிபார்த்தல் என்பது இன்னொரு வகை. இதில் வீட்டை சரியாக பூட்டி விட்டேனா என்ற சந்தேகம் வரும். ஒருவேளை வீட்டை சரியாக பூட்டாமல் இருந்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் வரும். யாரவது திருட வந்து கொள்ளை அடித்துவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகங்கள் வரும். அப்படி பூட்டினாலும் அவர்களுக்கு திருப்தி இருக்காது. மீண்டும் மீண்டும் அதை சரிபார்ப்பார்கள்.

OCD பிரச்னையில் வயது வித்தியாசம் என்பது கிடையாது. 15 அல்லது 20 வயதிற்குள்ளாகவே இது வரலாம். இதில் நோயின் தொடக்க நிலை, தீவிரமான நிலை என்பது இதிலும் உள்ளது. கை கழுவது என்பது நல்ல விஷயம். ஆனால் அதை அதிகளவில் செய்து கைகள் புண்ணாகும் வரை செல்வது என்பது மிகவும் தீவிரமான நிலை.

உதாரணமாக, ஒருவர் தேர்வுக்கோ நேர்காணலுக்கோ வேறு ஏதேனும் முக்கிய பணிக்கு செல்கிறார் என்றால் அவர் ஒருமுறை வீட்டை பூட்டி சரிபார்த்துவிட்டு செல்வார். ஆனால் இன்னும் அதை சரிபார்க்க வேண்டும் என குறித்த நேரத்தையும் தாண்டி அவர் சரிபார்த்துக் கொண்டே இருப்பதால் அவர் செல்ல வேண்டிய நேரத்தை தாண்டி ஆகலாம். இதிலேயே அவர்களுக்கு அதிக நேரம் செலவாகலாம். பயத்திலும் சந்தேகத்தில் பாதிக்கப்பட்டவர், எப்போதும் சிக்கலில் மாட்டிக்கொண்டவர் போல் இருப்பார்.

இது மூளையில் சில நியூராலாஜிக்கல் மாற்றத்தால் ஏற்படக்கூடிய விஷயம். அதனை செரொட்டோனின் [Serotonin, 5-hydroxytryptamine (5-HT)] என்று சொல்வோம். இது நியூரோட்ரான்ஸ்மிட்டர் (neurotransmitter) எனப்படும். தமிழில் அதற்கு நரம்பியக்கடத்தி எனப் பெயர். செரொட்டோனின் என்பது உடல்முழுவதும் செய்திகளை கொண்டு செல்லும் ஓர் ரசாயனம். இது குறையும் போதும் இப்பிரச்னை ஏற்படலாம். திருப்தி அளிக்கும் உணர்வுகள் மூளையில் சரியாக வேலை செய்யாததினால் அவர்களுக்கு எழும் சந்தேகங்களை சுலபமாக சரி செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

இப்பிரச்னையை மருத்துவ வழிமுறைகளின் மூலமும் சரி செய்யலாம். மருந்துகளாலும் சரி செய்யலாம். மருத்துவ வழிமுறைகளில் அவ்வாறு எழும் எண்ணங்களை எப்படி சரி செய்வது என்று கற்றுத்தருவோம். OCD பிரச்னையால் ஏற்படும் பாதிப்பு தனி ஒருவருக்கு மட்டும் பிரச்னையாக இருக்கும் வரை அது பிரச்னை இல்லை. அதை குணப்படுத்த முடியும்” என்றார்.