Doctor Mohan Pt web
ஹெல்த்

‘செயற்கை இனிப்புகள் சாப்பிட்டா நீரிழிவு நோய் வருமா?’ - WHO சொல்வது என்ன? விளக்கும் மருத்துவர் மோகன்!

‘நீண்டகாலம் NSS உட்கொண்டால், நீரிழிவு 2-வது வகை, இதய நோய்கள், பெரியவர்கள் மத்தியில் இறப்புகூட ஏற்படும் வாய்ப்பு உயர்கிறது’ என தெரியவருவதாக கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இதுகுறித்து மருத்துவர் மோகன் விளக்கம்.

ஜெ.நிவேதா

எந்தவொரு நல்ல செய்தியா இருந்தாலும், ஸ்வீட்டோட ஆரம்பிப்பதுதான் வழக்கம். ஆனா யார் கண்ணு பட்டுச்சோ… அந்த ஸ்வீட்லயே நமக்கு வினை வந்துருச்சு. கலோரிகள் அதிகம் இருக்கும் உணவு என்ற காரணத்தால் ‘சர்க்கரையை தவிர்த்திடுங்கள்’ என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்தி வந்தனர்.

‘சர்க்கரையே கூடாதா… அப்போ எங்களுக்கும் ஸ்வீட் வேணும்ல’ என நொந்துகொண்டனர் இனிப்பு விரும்பிகள்! இவர்களின் குறையை போக்கவே வரப்பிரசாதமாக வந்தது, செயற்கை இனிப்புகள். அதாவது, சர்க்கரை மாதிரி... ஆனா சர்க்கரை இல்ல… ஆனா இனிப்பை கொடுக்கும் என்ற தன்மை கொண்ட Non Sugar Sweeteners. இதை உட்கொண்டால், ‘இனிப்புக்கும் இனிப்பும் ஆச்சு, சர்க்கரை எடுக்காத மாதிரியும் ஆச்சு’ என்பதால் மருத்துவர்களே இதை பரிந்துரைக்க தொடங்கினர்.

Sugar Free

சர்க்கரை நோயாளிகள் முதல் உடல் எடை குறைய நினைப்போர் வரை, பலரும் கையில் எடுக்கும் ஆயுதம், ‘சர்க்கரையை விடுவதும்; செயற்கை இனிப்புகளை உணவில் சேர்ப்பதும்’. பெரிய உணவகங்கள், ஹைகிளாஸ் மீட்டிங், விலையுயர்ந்த பார்ட்டிகள் என எல்லா இடங்களிலும் க்யூட் குட்டி கவர்களில் கண்ணைக் கவரும் வண்ணம் வந்து அமர்ந்தன செயற்கை இனிப்புகள். நீரிழிவு குறைபாடு இல்லாதவர்கள்கூட செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டனர். உடல்நலனில் அக்கறை கொண்டவர்களாம்.

இப்படியான நிலையில்தான், இரண்டு தினங்களுக்கு முன்னர், உலக சுகாதார நிறுவனம் சார்பில் செயற்கை இனிப்புகள் பயன்பாடு தொடர்பாக முக்கியமான வழிகாட்டுதல் ஒன்று வெளியாகியிருந்தது.

அதில், “உடல் எடை குறைப்பு மற்றும் தொற்றாநோய் தடுப்பு போன்ற காரணங்களுக்காக சர்க்கரைச்சத்து இல்லாத, செயற்கை இனிப்புகளை (Non- Sugar Sweeteners [எ] NSS) மக்கள் பயன்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை உலக சுகாதார நிறுவனம் எடுக்கிறது” எனக்கூறியிருந்தது. 

No sugar

மேலும், “சர்க்கரைக்கு பதிலாக NSS பயன்படுத்துவது, நீண்ட காலம் உடல் எடையை குறைக்கவோ கட்டுப்படுத்தவோ உதவாது. NSS-க்கு பதிலாக, மக்கள் இயற்கையாகவே சர்க்கரைச்சத்து இருக்கும் உணவுகள், உதாரணத்துக்கு பழங்கள், அல்லது இனிப்பூட்டப்படாத உணவுகள் - பானங்களை உட்கொள்ளலாம்.

NSS அன்றாட உணவில் சேர்க்கும் அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்தது இல்லை, உண்மையில் அதில் ஒரு ஊட்டச்சத்தும் இல்லை. ஆகவே மக்கள் ஆரோக்கியமான வாழ்வை பெற, தங்கள் உணவில் இனிப்புகளை, சர்க்கரையை குறைக்கவேண்டும்.

இங்கு சர்க்கரை என சொல்லப்படுவது நேரடியான சர்க்கரை, தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படும் ‘சர்க்கரை என வகைப்படுத்தப்படுத்தப் படாதவை’ மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊட்டமில்லாத இனிப்புகளை உள்ளடக்கியவை. அதேநேரம் பற்பசைகள், ஸ்கின் க்ரீம், மருந்துகள், குறைந்த கலோரியுள்ள சர்க்கரை போன்றவை சர்க்கரைச்சத்தில் வராது

WHO Statement

சமீபத்தில் வெளிவந்த ஆய்வொன்றில், ‘NSS உடலில் உள்ள கொழுப்பை குறைக்க நீண்டகாலத்துக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. அதேநேரம் நீண்டகாலம் NSS உட்கொண்டால், நீரிழிவு 2-வது வகை, இதய நோய்கள், பெரியவர்கள் மத்தியில் இறப்புகூட ஏற்படும் வாய்ப்பு உயர்கிறது’ என தெரிகிறது. இதன் அடிப்படையில்தான் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் செய்கிறது.  

இந்த வழிமுறைகள் – கட்டுப்பாடுகள் - பிரச்னைகள் யாவும், ஏற்கெனவே நீரிழிவு நோய் உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு பொருந்ததாது” என்றுள்ளது.

இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மட்டுமன்றி மருத்துவர்கள் மத்தியிலும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. ஏனெனில் நேரடி சர்க்கரை என்பது, முழுக்க முழுக்க கலோரி நிறைந்தது. அதை தவிர்க்க நினைப்பவர்களுக்கு செயற்கை சர்க்கரைகளை மருத்துவர்களேவும் பரிந்துரைப்பதுண்டு. நிலைமை அப்படியிருக்க, உலக சுகாதார நிறுவனம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Sugar

இதுபற்றி நீரிழிவு சிறப்பு மருத்துவர் மோகனிடம் பேசினோம்.

அவர் பேசுகையில், “செயற்கை இனிப்பு தொடர்பாக நாங்களும் பல்வேறு நிலைகளில் ஆய்வுசெய்து வருகிறோம். இன்னும் எங்கள் ஆய்வு முடிவுகளை நாங்கள் வெளியிடவில்லையே. விரைவில் வெளியிடுவோம். இருப்பினும் விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் சொல்வது போல எந்தவொரு தரவும் எங்களுக்கு எங்கள் ஆய்வில் இதுவரை கிடைக்கவில்லை. செயற்கை சர்க்கரையென்பதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அது எல்லாமே ஆபத்தானது என்பது போல உள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து.

ஆய்வொன்றை அடிப்படையாக வைத்து உலக சுகாதார நிறுவனம் இந்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த ஆய்வென்பது, எலிகள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஏதோவொரு நிறுவனம் செய்த சின்ன ஆய்வு முடிவு. பெருவாரியான மக்கள் மத்தியில், அதாவது பெருவாரியான மனிதர்கள் மத்தியில் இப்படியான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அதன்முடிவுகளே பரிந்துரைக்கப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் போன்ற பொறுப்பு நிறுவனம், இதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்திருப்பது, ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் மோகன்

இயற்கையாக கிடைக்கப்பெறும் சர்க்கரையை பரிந்துரைக்கிறார்கள் அவர்கள் (உலக சுகாதார நிறுவனம்). நேரடி சர்க்கரை என்பது, 100 மடங்கு மோசமானது. ஏனெனில் அதில் அவ்வளவு கலோரிகள் உள்ளன. சரி சர்க்கரை வேண்டாம்... இயற்கையாக இனிப்பு சுவையுள்ள வேறு உணவுகளை உட்கொள்ளலாமே என்கிறார்கள். இதைப்பார்த்து மக்கள் தேன், வெல்லம் போன்றவற்றை உட்கொண்டால் என்ன ஆவது? ஆகவே அந்த பரிந்துரையும் ஆபத்தானதுதான்.

‘உடல் எடை குறைக்க நினைத்து செயற்கை சர்க்கை உட்கொள்வோருக்கு தான் இந்த அறிவுரைகள் பொருந்தும், சர்க்கரை நோயாளிகளுக்கு அல்ல’ என்கிறார்கள். உண்மையில் NSS-ஐ அதிகம் உட்கொள்வதே, சர்க்கரை நோயாளிகள் தான்.  NSS சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என சொல்லும் அதே WHO, பின் NSS சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்னையில்ல என்கிறது. இந்த முரணிலேயே சிக்கல்கள் உள்ளன.
Sugar

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, என் ஆலோசனை எளிது. நீங்கள் சர்க்கரையை குறைப்பதைவிடவும், அரிசியை குறையுங்கள். ஏனெனில் இந்தியர்கள் எடையில் முக்கிய பங்கு அரிசி உணவுகளுக்குத்தான் உள்ளது

எங்கள் பரிந்துரையெல்லாம், சர்க்கரை சேர்க்கவில்லை என்பதற்காக அளவுக்கு மீறி டயட் சோடாவையோ, டீ காபியையோ குடிக்காதீர்கள் என்பதுதான். ஏனெனில் அவையும் கலோரிகளை உடலில் அதிகரிக்கச்செய்யும். மற்றபடி, கார்போஹைட்ரேட்ஸ் தவிர்த்தல் நலம். இவையன்றி செயற்கை இனிப்புகளை மருத்துவர் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட அளவு உட்கொள்வதில்லை, பிரச்னை இருக்காது” என்றார்.