ரம்யா கபிலன் pt web
ஹெல்த்

“பிரெக்னன்சி முதல் டெலிவரி வரை... முழுமையான வழிகாட்டியா இருப்போம்!”- மருத்துவர் ரம்யா கபிலன்

பிரசவத்துக்குப்பின், தாய்ப்பால் கொடுப்பதை தவிர, குழந்தைக்கு தேவையான எல்லா வேலையையுமே அப்பா செய்யலாம், செய்யணும்!

ஜெ.நிவேதா

மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவரான ரம்யா கபிலன், Right Pregnancy care அதாவது கர்ப்பகாலத்தை சரியான முறையில் அணுகுவது எப்படி என்பதை வலியுறுத்துவதற்காக, முழுமையான கர்ப்பகால ஆலோசனைகள் என்ற நோக்கத்தில் C3 (Caring the Carrying Club) என்ற பெயரில் ஒரு திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அதுகுறித்தும், கர்ப்பகாலத்திலுள்ள பெண்களுக்கான ஆலோசனைகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் அவர்..

ரம்யா கபிலன்

“Complete Maternity Care, ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் முக்கியமென ஏன் நினைக்கின்றீர்கள்? இதில் என்ன மாதிரியான விஷயங்களெல்லாம் உள்ளடங்கும்?”

கருவுற்ற பெண்கள் அவர்களுடைய குழந்தையை மட்டும் சுமப்பதில்லை. அவர்களுடைய எதிர்காலத்தை சுமக்கிறார்கள். ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்பார்ப்பையும் சுமக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களுடைய உடல் நலன், மன நலன், சூழல் நலன், சிசு நலன் என்று எல்லா நலன்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் மேற்சொன்ன எல்லா நலன்களுக்குமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் ஒரே தளத்தில் கிடைக்கச் செய்யும் முயற்சிதான் என்னுடைய C3 திட்டம்.

கருவுற்ற பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு கேள்விகள் மற்றும் குழப்பங்கள் வரும். எல்லாவற்றிற்கும் அவர்களுடைய மருத்துவரை மட்டுமே சார்ந்திருப்பது சிரமம். அதற்காக பெண்களே வெவ்வேறு வகுப்புகள் மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு கருவுறும் பெண்களுக்கு மன நலன் மிகவும் முக்கியம். மன நலன் ஆரோக்கியமற்று இருந்தால் அது அந்த பெண்ணை மட்டும் இல்லாமல் குழந்தையின் உருவாக்கத்தையும் குணாதிசயத்தையும் பாதிக்கும். அதற்கு என்று தனியாக தியானம், யோகா என்று வெவ்வேறு வகுப்புகளில் சேர்கிற பெண்களைப் பார்க்கிறோம். அதே போல் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் முறைகளும் பால் கொடுக்கும் முறைகளும் என்ன என்பதைச் சொல்லித்தர இன்று பல வீடுகளில் பெரியவர்கள் இல்லை. அதற்கும் பெண்கள் வெளியே ஒரு வழிகாட்டுதலைத் தேடுகிறார்கள். இது அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ஒரு முழுமுதற் தளத்தை நான் கடந்த மூன்று ஆண்டுகால உழைப்பில் உருவாக்கியிருக்கிறேன்.

“இப்போதெல்லாம் சி செக்‌ஷன் டெலிவரிகள் அதிகரித்துள்ளது என்பது பற்றிய உங்களின் பார்வை என்ன? முறையான Maternity Counselling மூலம், சுகப்பிரசவங்கள் அதிகரிக்குமா? ‘சுகப்பிரசவங்கள்தான் பாதுகாப்பானது - சி செக்‌ஷன் ஆபத்தானது’ என்ற பார்வையை, மருத்துவராக நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?”

சி-செக்‌ஷன் அதிகரித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று - குழந்தை கருவில் இருக்கும்போதே அந்த குழந்தையின் நிலையையும் பிரசவத்தில் ஏற்படவிருக்கும் சிக்கல்களையும் முன்கூட்டியே கணிக்க முடிந்த தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஆரோக்கியமான சுக பிரசவத்திற்கு வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் தாய் மற்றும் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் இந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு சுகப் பிரசவமா அல்லது சி-செக்‌ஷனா என்று கலந்தாலோசித்து முடிவு எடுக்கிறார்கள். நம் முன்னோர்களின் காலத்தில் இத்தகைய வசதி இல்லாததால் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன.

இரண்டு - நம் முன்னோர்களுக்கு உடல் உழைப்பு அதிகம். அது சுகப் பிரசவத்திற்கு அவர்களைத் தயார்படுத்தியது. இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பு குறைவு. அதனால் அந்த உடல் சுக பிரசவத்திற்கு ஒத்துழைப்பதில்லை. சுக பிரசவத்திற்கு ஒத்துழைக்கும் வண்ணம் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் உருவாக்கியிருக்கும் பாடத்திட்டத்தில் விரிவாக பேசியிருக்கிறேன். இது சிறந்தது - அது சிறந்தது இல்லை என்று எதையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலைக்கும் ஒவ்வொரு பிரசவமுறை சிறந்தது.

“இன்றைய பெண்களுக்கு, பிரசவம் பற்றிய பயம் அதிகம் உள்ளது. இது எல்லா காலத்திலும் இருந்திருக்கு என்றாலும்கூட, இப்போதெல்லாம் பிரசவ பயத்தினால் ‘குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம்’ என முடிவெடுக்கும் பெண்கள் அதிகரிச்சிருக்காங்க. இதை எப்படி பார்க்குறீங்க? இப்படியான இணையர்களுக்கு கவுன்சிலிங் தேவையயென நினைக்கிறீங்களா?”

“குழந்தை பெறுவதென்பது, ஒவ்வொருவரின் சாய்ஸ். யாரையும் குழந்தை பெற்றுக்கொண்டே ஆகவேண்டுமென நாம் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் வலி பயத்தால்தான் குழந்தை வேண்டாம் என்கிறேன் என சொல்லும் பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் பயிற்சியின் மூலம் அந்த அச்சத்தைத் தவிர்க்க முடியும். மட்டுமன்றி, இன்று ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள ஏராளமான வழிமுறைகள் வந்துவிட்டன. மயக்க மருந்துகள், மாத்திரைகள் ஒருபுறம் இருந்தாலும் இயற்கையான வலி நிவாரண பயிற்சிகள் மூலம் பிரசவ வலியை எதிர்கொள்ள முடியும். ஆகவே அச்சம் தேவையில்லை”

“கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள் என்னென்ன? செய்யக்கூடாத வீட்டுவேலைகள் என்னென்ன?”

செய்யக்கூடாத வேலைகள் என்று சொல்வதை விட செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். கருவுற்ற காலத்தில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது முக்கியம். இதுவும் ஒவ்வொருவரின் உடல்வாகு பொறுத்தே சொல்லமுடியும். 15 - 20 ஆண்டுகளுக்கு முன்புவரை நாம் கூட்டுக்குடும்பங்களாக இருந்திருப்போம். குறைந்தபட்சம் வீட்டுப்பெரியவர்களாவது உடனிருந்தப்பர். அதனால் கர்ப்பகாலத்தில் வீட்டுப்பெரியவர்களின் ஆலோசனை நிறைய கிடைத்திருக்கும். இப்போது அதில் விரிசல் உள்ளது. இதனால் யூ-ட்யூப் பார்த்து பரிந்துரையின்றி, கண்காணிப்பின்றி கர்ப்பிணிகள் சுயமாக செய்துகொள்ளும் உடற்பயிற்சிகள் அதிகரித்துள்ளன. இதை தவிர்க்க, நேரடி ஆலோசனை கட்டாயம். மருத்துவரிடமோ, உடற்பயிற்சி நிபுணரிடமோ கேட்டு, அவர்கள் சொல்வதை செய்துவர வேண்டும்.

உடற்பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதை மட்டுமே மனதில் கொண்டு உடற்பயிற்சி செய்வது நன்றன்று. பலர் குழந்தை பெற்றவுடன் உடற்பயிற்சியை விட்டுவிடுகின்றனர். இது தவறு. உடற்பயிற்சி என்பது, வாழ்நாளுக்கானது. உங்கள் உடலுறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், வலியின்றி நீங்கள் வாழவும் உங்களுக்கு அவைதான் உதவும். வாழ்நாள் முழுக்க நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால், அதற்கு அன்றாடம் நீங்கள் உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும்”

“கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்திலும், Postpartum சமயத்திலும் மனதளவிலான சப்போர்ட் பெண்ணுக்கு எந்தளவு முக்கியம்? இதில் சம்பந்தப்பட்ட கணவர், தன் மனைவியை எப்படியெல்லாம் கேர் செய்யணும்?”

“கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்ணென்றால் அவருடன் சேர்ந்து இவரும் உடற்பயிற்சி செய்வது, அவர் சரியாக சாப்பிட்டாரா - தூங்கினாரா - உடல் வலி / அசௌகரியம் ஏதும் அவருக்கு இருக்கா என்பதையெல்லாம் சரிபார்ப்பது, அதை சரிசெய்ய மனதளவுல எவ்வளவு துணையா இருக்கோம் என சுயபரிசோதனை செய்துகொள்வது என்பதெல்லாம் அவசியம்.

பிரசவ நேரத்தில், உடல்வலியை பகிர்ந்துக்க முடியாதென்றாலும் மன வலியை பகிர்ந்துக்கலாம். நான் இருக்கேன் என்பதை செயல்களால் கணவர் தன் மனைவிக்கு உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். இது அப்பெண்ணின் பிரசவத்தை நிஜமாகவே அழகாக்கும்!

பிரசவத்துக்குப்பின், தாய்ப்பால் கொடுப்பதை தவிர, குழந்தைக்கு தேவையான எல்லா வேலையையுமே அப்பா செய்யலாம், செய்யணும்!

எந்தச் சூழலிலும் ‘அவங்க குழந்தை பெற்றுக்கவில்லையா, இவங்க பெற்றுக்கவில்லையா’ என்றெல்லாம் யாரையும் அந்தப் பெண்ணோடு கம்பேர் பண்ணக்கூடாது. 'Every Women, Every Mother is Different! And Everyone is a Winner' - இதை எல்லா பார்ட்னரும், குடும்பங்களும் உணரவேண்டும்.

(சில கணவன் - மனைவி பிரசவ நேரத்தில் தொலைவில் இருப்பார்கள். அப்படியானவர்கள், தொலைபேசி வழியாக கனெக்டடாக இருக்கலாம். எந்தச் சூழலிலும் தொடர்பற்று இருக்கக்கூடாது. ‘அதான் உன் கூட என்னோட / உன்னோட பேரண்ட்ஸ் இருக்காங்களே’ என நினைப்பது தவறு. எத்தனை பேர் இருந்தாலும் பிரசவ நேரத்திலுள்ள பெண்ணுக்கு, இணையின் சப்போர்ட் கட்டாயம் தேவை)

இதெல்லாம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட பெண் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருப்பார். இதனால் அவரால் ஆரோக்கியமாக இருக்க முடியும், பிரசவத்தை மகிழ்வாக எதிர்கொள்ள முடியும் - தாய்ப்பால் நன்கு கொடுக்க முடியும் - மன அழுத்தம் குறைந்து குழந்தையுடனும் அதிக நேரம் செலவிட முடியும்... இப்படி இன்னும் ஏராளமான முடியும்கள் கிடைக்கும்!”

“C3 குறித்து....”*

ஒரு பெண் தன் பிரசவ காலத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கடப்பதற்கு வழிகாட்டுகிற ஒரு பாடத்திட்டம்தான் C3. இதில் மருத்துவ ஆலோசனைகள், உடற்பயிற்சி வகுப்புகள், வலி நிவாரண வழிமுறைகள், யோகா பயிற்சி, மனநல அறிவுரைகள், குழந்தை நலன் ஆலோசனைகள் என அனைத்தும் காணொளிகளாகவும் நேரலையாகவும் வழங்கப்படுகின்றன. உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் இந்த வகுப்புகளில் இணைந்து இதன் சேவைகளைப் பெற முடியும். இது முழுக்க முழுக்க இணையவெளி வகுப்புகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது.

C3 குறித்தான விவரங்களை இங்கு காணலாம்..