குறைப்பிரசவ குழந்தைகள் Freepik
ஹெல்த்

குறைப்பிரசவம் ஏன் ஏற்படுகிறது? பாதிப்புகள் எவை? தடுக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

குறைப்பிரசவம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? குறைப்பிரசவ குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்? குறைப்பிரசவ குழந்தைகளுக்கு இறப்புகூட ஏற்படுமா? பார்ப்போம்...

ஜெ.நிவேதா

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடும்போது ஏற்பட்ட குறைபாட்டால், குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும் இதனால் கையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த மாத தொடக்கத்தில், குழந்தையின் கை அகற்றப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணையும் அச்சமயத்தில் செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

இந்நிலையில் அக்குழந்தைக்கு அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நேற்று (ஆகஸ்ட் 6) சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இவ்விவகாரத்தில் குழந்தையின் மரணத்துக்கு என்ன காரணமென அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை நேற்று வெளியானது. அதில், “குழந்தை முகமது மகீர், குறைப்பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் 32 வாரத்தில் பிறந்தது. அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt எனும் சிகிச்சை குழந்தைக்கு வழங்கப்பட்டது. மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. 

இந்நிலையில் நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்ட VP shunt  ஆசன வாய் வழியாக வெளியேறியது. குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதித்தது. வைட்டமின் டி குறைபாடு, ஹைப்போதைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் சூடோமோனாஸ் பாக்டீரியா ரத்தத்தில் கலந்ததால் ஏற்பட்ட  பாதிப்பின் காரணமாக நச்சுத்தன்மை ரத்தத்தில் கலந்து  குழந்தை உயிரிழந்துவிட்டது” என மருத்துவமனை தெரிவித்தது.

குறைப்பிரசவம் என்றால் என்ன?

இதில் மூன்று வகைகள் உள்ளன.

மிக மிக முன்கூட்டியே பிறந்த குழந்தை (28 வாரங்களுக்குள் பிறப்பது)

மிகவும் குறைப்பிரசவம் (28 – 32 வார இடைவெளியில் பிறப்பது)

இடைப்பட்ட காலம் (32 – 37 வார இடைவெளியில் பிறப்பது)

குறைப்பிரசவம் ஏன் ஏற்படுகிறது?

இப்போதுவரை பதிவான காரணங்களில் அதிகம் வந்தவை:

- தாய் இதற்கு முன் பல பிரசவங்களை எதிர்கொண்டிருப்பது,

- தாய்க்கு ஏற்படும்தொற்றுகள்,

- நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பாதிப்புகள்

ஆகியவை. இருப்பினும் மேலும் ஆய்வுசெய்யப்பட்டால் இன்னும் பல பிரச்னைகள் அறியப்படும்.

குறைப்பிரசவ குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்?

குறைப்பிரசவ குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, அவற்றிலிருந்து குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் அவர்களிடம் பேசினோம்.

குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார்

அவர் கூறுகையில், “குறைப்பிரசவக் குழந்தைகள் என்பதே ஒரு பிரச்னைக்குரிய விஷயம்தான். அவர்களுக்கு தாயின் கர்ப்பப்பையில் அவர்களுக்கு ஏதோ சிக்கல் இருந்ததால்தான் அவர்கள் விரைந்து வெளியே வருகின்றனர். விரைந்து அவர்கள் வெளியேவரும்போது உடலின் பல பகுதிகள் வளர்ச்சியடைந்திருக்காது.

குறிப்பாக நுரையீரல், கல்லீரல் போன்றவையெல்லாம் வளர்ச்சி பெற்றிருக்காது என்பதால் உடல் இயக்கமே சிரமத்துக்கு உள்ளாகும். இதைவிட முக்கியம், ஊட்டச்சத்து குறைபாடு. மேலும் இப்படியான குழந்தைகளுக்கு மூளையில் ரத்தநாளங்களும் மிக மிக சிறியளவு இருக்கும், மிகவும் வலுவிழந்தும் இருக்கும். ஆகவே ரத்தக்கசிவுக்கான வாய்ப்பும் அதிகம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம், வெளியிலிருந்து அவர்களுக்கு தொற்று வருவது. இதையெல்லாம் தடுத்து, அவர்களின் எல்லா விஷயங்களுக்கும் நாம்தான் சப்போர்ட் கொடுக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு காட்டுக்குள் சென்றுவருவது போலத்தான். எப்போது வேண்டுமனாலும் பிரச்னை வரும். ஆகவே எல்லாவற்றிலும் கவனம் வேண்டும். இந்த சப்போர்ட் சிஸ்டம் சரியானபடி இருந்தால், நம்மால் அக்குழந்தையை காக்கமுடியும். அதையும் மீறி சிக்கல் ஏற்பட்டால், பிரச்னைதான்.

இப்படி சரியான சப்போர்ட் சிஸ்டம் மூலம் அந்தக் குழந்தை முதல் சில மாதங்களுக்கு பாதுகாக்கப்பட்டாலும், பின் வீடு சென்ற பிறகும் அவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் குறைப்பிரசவ குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமில்லாதவர்களாக இருப்பர். ஆகவே அவர்கள் விஷயத்தில் பெற்றோர் இன்னும் கவனமாக இருக்கவேண்டியிருக்கும். இதையெல்லாம் தவிர்க்கவும் தடுக்கவும் மிகச்சிறந்த வழி, குறைப்பிரசவத்தை தடுப்பது மட்டுமே” என்றார்.

குறைப்பிரசவத்தால் இறப்பு ஏற்படுமா?

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய ஒரு அறிக்கையில், “பெரும்பாலான குறைப்பிரசவங்கள், தெற்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவில்தான் நிகழ்கின்றன. மிக மிக குறைப்பிரசத்தில் பிறந்த குழந்தைகள் (28 வாரத்துக்கு முன் பிறந்தவர்கள்) உயிர்பிழைக்கும் எண்ணிக்கை, நிலப்பரப்பை பொருத்து வேறுபடுகிறது.

உதாரணத்துக்கு, குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் பிறக்கும் (குறைப்பிரசவத்தில்) 90% -க்கும் அதிகம் உயிரிழக்கின்றனர். அதிக வருமானம் கொண்ட நாடுகளெனில், 10%-க்கும் குறைவான குழந்தைகள் இறக்கின்றனர்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.

குறைப்பிரசவத்தை தடுக்க முடியுமா என்றால், சில நேரத்தில் அதுவும் சாத்தியம் என்கிறது மருத்துவம். அதற்கு கர்ப்பிணிகள் செய்யவேண்டியது என்னென்ன?

இப்பிரச்னைகளை தடுக்க, WHO-வும் குறைப்பிரசவத்தையே தடுக்கவேண்டும் என்றே சொல்கிறது. அத்துடன்,

“கர்ப்பிணிகள்,

- ஆரோக்கியமான உணவுமுறை

- சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகள்

- புகையிலை மற்றும் அதுசார்ந்த பொருட்களை தவிர்ப்பது

- குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க உதவும் அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேனிங் செய்துகொள்வது

- கர்ப்ப காலத்தில் குறைந்தது 8 முறையாவது மருத்துவரை அணுகுவது

- 12 வாரத்துக்கு முன்பிருந்தே கர்ப்பகால தொற்றுகளை தவிர்ப்பது எப்படியென மருத்துவ ஆலோசனை பெறுவது ஆகியவை கட்டாயம்” என்கிறது. வாழ்வியல் பாதிப்புள்ள கர்ப்பிணிகள், அதற்கான உரிய சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம்.

(குறிப்பு: தமிழ்நாட்டை பொறுத்தவரை தாய் சேய் இறப்பென்பது மிகவும் குறைவுதான். ஆகவே இங்கு குறைப்பிரசவத்தால் நிகழும் தாய் - சேய் உயிர் அச்சம் இல்லை. இருப்பினும் குறைப்பிரசவங்களை தடுப்பதன் மூலம் வருங்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க முடியும். ஆகவே அதில் கவனம் செலுத்துவது கட்டாயம்)

தரவுகள் சொல்வதென்ன?

- உலகளவில், 2020-ல் மட்டும் தோராயமாக 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளனர்.

- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குறைப்பிரசவம் முக்கிய காரணமாக உள்ளது. 2019 கணக்குப்படி, 9 லட்சம் குழந்தைகள்வரை இக்காரணத்தால் இறந்திருக்கலாம்

- உரிய மருத்துவ வசதி இருந்தால், இவர்களில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாம்.

தகவல் உதவி: WHO