ரத்த அழுத்தம் முகநூல்
ஹெல்த்

ரத்த அழுத்ததின் 5 நிலைகள் என்னென்ன? 50 வயதுக்கு மேல் ரத்த அழுத்தத்திற்கான வாய்ப்பு அதிகமா?

ரத்த அழுத்தத்திற்கும் வயதுக்கும் என்ன தொடர்புள்ளது, ரத்த அழுத்ததில் உள்ள நிலைகள் என்னென்ன என்பது பற்றி விளக்குகிறார் பொது நல மருத்துவர் எம். அருணாச்சலம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ரத்த அழுத்தத்தில் கிட்டத்தட்ட 5 நிலைகள் இருக்கின்றன என வகைப்படுத்துகிறது, அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன். அவற்றை பார்ப்போம்.

1) இயல்பு நிலை ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

120/80 என்று ரத்த அழுத்த அளவு இருக்கவேண்டும். சத்தான உணவு முறை, ஆரோக்கிய உணவு பழக்கம், உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுதல், இதயத்திற்கு ஆபத்து விளைவிக்காத வாழ்வியல் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் இயல்பு நிலை ரத்த அழுத்தத்தை தக்கவைத்து கொள்ளலாம்.

2) ரத்த அழுத்தம் அதிகரித்த நிலை:

அதிகரித்த நிலை

இத்தகைய நிலையில்

சிஸ்டாலிக் அழுத்தம்: 120-129 என்றும்

டயஸ்டாலிக் அழுத்தம் : 90 க்கு மேல் என்றும்

தொடர்ந்து நீடிக்கும். முறையாக கவனிக்காவிட்டால், இது ரத்த கொதிப்புக்கான அபாயத்தை உண்டாக்கும். அப்படியான பட்சத்தில், இருவகையான ரத்தக் கொதிப்பு ஏற்படலாம்.

3) ரத்தக் கொதிப்பு நிலை 1:

சிஸ்டாலிக் அழுத்தம்: 130-139 என்றும்

டயஸ்டாலிக் அழுத்தம் : 90 க்கு மேல் என்றும்

இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்றவையும் ஏற்படலாம் என்பதால் மருத்துவ அறிவுரை கட்டாயம் தேவை.

4) ரத்தக்கொதிப்பு நிலை 2:

சிஸ்டாலிக் அழுத்தம்: 140

டயஸ்டாலிக் அழுத்தம் :90

என்று அதிகமாக இருக்கும். இதற்கும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இசிஜி எக்கோ பரிசோதனை செய்வது கட்டாயம்.

5) உயர் ரத்த அழுத்த நிலை:

இவர்களின் ரத்த அழுத்தம் திடீரென்று 180/120க்கு மேலாகச் செல்லும். இந்நிலையில் உடல் உறுப்புகள் சேதமடையும் ஆபத்து உண்டு. நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், முதுகு வலி, பதபதப்பு, அதீத தளர்ச்சி, பேசுவதில் சிரமம், பார்வைக் கோளாறு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

பொது நல மருத்துவர் அருணாச்சலம்

இதில், முதன்மை உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் என்று 2 நிலைகள் உள்ளன.

- முதன்மை உயர் ரத்த அழுத்தம் ஒரு நபரின் வயதோடு தொடர்புடையது. இதற்கு காரணங்கள் எதுவும் அறியப்படவில்லை.

- இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு அட்ரீனல் சுரப்பி கட்டிகள், சிறுநீரக நோய், தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம்.

இந்த நம்பருக்கும் ரத்த அழுத்தத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம்?

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படுத்தும் முக்கிய ஆபத்து காரணியாக சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு, பெரிய தமனிகளின் விறைப்புத் தன்மையின் காரணமாக வயதுக்கு ஏற்ப சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் சீராக உயர்கிறது.

என்ன சம்பந்தம்

இதன் காரணமாக ரத்தக் கட்டிகள், இதய நோய்கள், வாஸ்குலர் நோய்கள் போன்றவை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதிகரித்த சிஸ்டாலிக் அல்லது டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவீடுகளை கொண்டு, உயர் ரத்த அழுத்தத்தை நாம் கண்டறியலாம். அப்படி கண்டறியும்பட்சத்தில், தகுந்த மருத்துவ ஆலோசனையை விரைந்து பெறுவது அவசியம்.

ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள்:

ரத்த அழுத்த காரணிகள்
  • புகைபிடித்தல்

  • உடல்பருமன்

  • அதிக அளவிலான உப்பு (தென்னிந்திய உணவுகளில், குழம்பில் 5 கிராம் உப்பு மட்டுமே சேர்ப்பது நல்லது)

  • குடிப்பழக்கம்

  • உடல் செயல்பாடு குறைவு

  • மன அழுத்தம்

  • சிறுநீரக நோய்கள்

  • நீரிழிவு நோய்

  • மரபுவழி காரணங்கள்

    போன்றவை.