ஹெல்த்

கைகளை கழுவுவதும் நோயா? - OCDம் அதன் அறிகுறிகளும்! What is OCD?

கைகளை கழுவுவதும் நோயா? - OCDம் அதன் அறிகுறிகளும்! What is OCD?

JananiGovindhan

கொரோனா பரவலின் முதல் மற்றும் இரண்டாவது அலை அதிகமாக இருந்த போது கைகளை சுத்தம் செய்வதை அனைவரின் வழக்கமாக இருந்து வந்தது. நோய் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் அந்த பழக்கம் வழக்கமானது.

ஆனால் பொதுவாகவே ஒரு நபர் அடிக்கடி கைகளை கழுவுவது, தான் இருக்கும் இடத்தில் சுத்தமாக வைத்திருப்பது, குப்பை உள்ளிட்ட
அசுத்தங்களை கண்டால் தலைதெறித்து ஓடுவது போன்ற பழக்கம் கொண்டவர்கள் OCD எனக் கூறக்கூடிய obsessive-compulsive disorde-ஆல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பொருள்.

அதாவது, தூசி படிந்த கம்ப்யூட்டர் கீபோர்டை தொட்டால் கையில் அழுக்கு ஒட்டிவிட்டதாக எண்ணி உடனே சென்று கைகள் நன்கு சோப்பு போட்டு கழுவும் வழக்கம் இருப்பதுதான் OCDன் முதன்மை அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் மயோ க்ளினிக் நிபுணர்கள், “OCDயால் பாதிக்கப்பட்டவர், தன்னை சுற்றி கிருமிகள் இருக்கும் எண்ணத்துடனும், அச்சம், ஸ்ட்ரெஸ், பதற்றத்துடனும் இருப்பார்கள். மூளையில் இருக்கும் செரொடோனின் அளவு குறைந்தால் OCD பிரச்னை உருவாகும். அதனால் தன்னை எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே வைத்திருப்பார்கள்” எனக் கூறியிருக்கிறார்கள்.

OCD பாதிப்புக்கு கருதப்படும் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை காணலாம்:

1) சந்தேக எண்ணத்தோடு இருப்பது (எ.கா: கதவை மூடுவது, கேஸ் சிலிண்டர் அணைப்பது)
2) அடிக்கடி பொருட்களை சுத்தம் செய்வது
3) கைகளை கழுவுவதையே முழு நேர வேலையாக கொண்டிருப்பது
4) சுத்தமான இடத்திலேயே இருக்க வேண்டும் என எண்ணுவது
5) கூட்டமான இடங்களுக்கு செல்ல பயப்படுவது


6) அழுக்குகளை கண்டாலே பயப்படுவது அல்லது மயங்கி விழுவது
7) கட்டுப்பாட்டை இழந்து உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு செய்திடுவோமோ என்ற ஆக்ரோஷமான அல்லது பயங்கரமான எண்ணங்கள்
8) ஒருவருக்கு கைகுலுக்கவே பயப்படுவது
9) மதம், பாலியல் சார்ந்த விஷயங்களில் தேவையற்ற எண்ணங்களை கொண்டிருத்தல்
10) எடுத்த இடத்திலேயே பொருட்கள் வைக்கப்பட வேண்டும் என நினைப்பது
11) நெகட்டிவிட்டியை எதிர்க்க வேண்டுமென்றே சிந்தித்துக் கொண்டிருப்பது

இவையெல்லாம் தினசரி வழக்கமாக கொண்டிருந்தால் அது உங்களது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனால் இணையருடன் அடிக்கடி சண்டையிடச் செய்து உறவையும் பாதிப்படைய வைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

OCDக்கு உளவியல் ரீதியான சிகிச்சையே முதலில் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் OCDயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து வழங்கப்படும்.

ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு அப்பால் OCDயால் வரும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணிக்க வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதும் அவசியமே.

அதன்படி முறையான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, யோகா, தியானம் என மெடிட்டேட் செய்து வந்தால் நல்லது.