Heat stroke pt web
ஹெல்த்

உயிருக்கே ஆபத்தாகும் Heat stroke - அறிகுறிகள் என்னென்ன? தற்காப்பது எப்படி?

PT WEB

இப்படியொரு வெயிலை பார்த்ததில்லை என்பதுதான் ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறோம். ஆனால் இம்முறை அதீதமான வெயிலை தமிழ்நாடும், பிற மாநிலங்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வெயிலின் அதீத தாக்கத்தால் வெப்ப வாதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

Heat stroke என்பது என்ன?

ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாதம் என்பது ஒரு அவசர மருத்துவ நிலையாகும். பொதுவாக இந்நிலையின்போது உடலின் வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும். அதீத வெயிலில் ஒருவர் இருக்கும் போது, உடல் சாதாரண வெப்ப நிலையை தானாகவே கையாள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், வெப்ப வாதத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவர்கள் சொல்வதென்ன?

பொது மருத்துவரான பூபதி ஜான் வெப்பவாதத்தின் அறிகுறிகளையும் அதிலிருந்து தற்காத்து கொள்வது குறித்தும் கூறுகையில், “ஹீட் ஸ்டோர்க் என்பதைத் தமிழில் வெப்பவாதம் என சொல்லலாம். பொதுவாகவே உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 98.6 டிகிரி பாரன்ஹீட். இதைவிட உடல் அதிக வெப்பநிலையில் இருந்தால், உடலில் சூடு அதிகமாகிவிட்டது என சொல்லுவோம். உடலின் வெப்பநிலை 106 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதே ஹீட்ஸ்டோர்க் என்போம்.

வெப்பம் அதிகமாகும் போதெல்லாம் உடலே வெப்பத்தை தணித்துவிடும். அதிகமான வேர்வையை வெளித்தள்ளி உடலில் இருக்கும் சூட்டை உடலே குறைத்துவிடும். ஆனால் வேர்வையை வெளித்தள்ளும் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், உடலில் வெப்பம் அதிகமாகி வெப்பவாதம் ஏற்படும்.

ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும். முதலில் தலைவலி ஏற்படும். பின் தலைசுற்றல், வாந்தி, மயக்கம், சுயநினைவை இழப்பார்கள். படபடப்பு ஏற்படும், மூச்சு அதிகமாக இழைக்கும், நெஞ்சுவலி ஏற்படும், ரத்த அழுத்தம் குறையும். உடலின் சருமம் வறண்டுவிடும், வேர்வையே வராது. இதுபோன்ற அறிகுறிகள்தான் வெப்பவாதத்தின் அறிகுறிகள்.

இதுபோன்ற காலத்தில் வெயிலில் போவதை முதலில் தவிர்க்க வேண்டும். அப்படியே போனாலும் குடைபிடித்துக்கொண்டு போகலாம். தண்ணீர் அதிகமாக குடித்து உடலின் வெப்பத்தை குறைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் வெப்பவாதம் உங்களைத் தாக்காது. நுங்கு, இளநீர், சாத்துக்குடி, லெமன் போன்ற சாறுகளையும் சாப்பிடலாம்” என்கிறார் மருத்துவர்.

11 முதல் 3 மணிவரை வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால், குடை எடுத்துச் செல்ல வேண்டும்,

உடலை முழுதாய் மறைக்கும் ஆடைகள், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,

குழந்தைகள், முதியவர்கள் கர்ப்பிணிகளை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்

- என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதீத வெப்பத்தால் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. 2015 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2,081 மரணங்கள் பதிவாகியுள்ளன என்கிறது Union ministry of earth sciences. இதனால் வெயிலை எளிதில் எண்ணாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.