தூசியால் அலர்ஜி, குறிப்பிட்ட உணவினால் அலர்ஜி, கூட்டம் என்றால் அலர்ஜி, சத்தம் கேட்டால் அலர்ஜி என்று என்னென்னவோ அலர்ஜிக்களை நாம் கேட்டிருப்போம். ஆனால், தண்ணீரில் அலர்ஜி என எப்போதாவது நீங்கள் கேட்டதுண்டா?.. கேட்பதற்கே புதுதாக உள்ளதள்ளவா? அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவ்வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லோரேனின் என்ற அந்த பெண்ணுக்கு வயது 22. இவர் அமெரிக்காவில் சவூத் கரோலினாவில் வசித்து வருகிறார். நியூயார்க் போஸ்ட்டின் படி, 12 வயது முதலே இவருக்கு அலர்ஜி பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து உடல்நிலை மோசமாகவே, மூன்று வருடத்திற்கு பிறகு மருத்துவரிடம் சென்று சோதனை செய்துப்பார்த்ததில் அக்வாஜெனிக் யூர்டிகாரியா (Aquagenic urticaria) என்ற நீரினால் ஏற்படும் அலர்ஜி இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு, குளித்தாலோ அல்லது வேறு எந்தவகையிலாவது தண்ணீரோடு தொடர்பு கொண்டாலோ உடல் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அரிப்பு ஏற்பட்டு , சிவப்பு தடிப்புகள் உண்டாகக்கூடுமாம். மேலும் தாங்க முடியாத வலியை கூட ஏற்படுத்தும் என்று அப்பெண் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
சில வீடியோக்களில் இதுபற்றி பேசியுள்ள அவர், “என் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் கூட உடலில் சிவப்பு நிற தடுப்புகள் ஏறப்பட்டு அது மிகுந்த வலியை உண்டாக்கும். பின் அதுவே அரிப்பாக மாறிவிடும்.
இதனால் ஏற்படும் அரிப்பினை தடுப்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்று. அதனால்தான் முடிந்தவரை தண்ணீரில் இருந்து விலகியே இருப்பேன். என்னை தூய்மைப்படுத்தி கொள்ள, ஒரு வித துடைப்பான்களைதான் பயன்படுத்துகிறேன். அடிக்கடி என் ஆடையை மாற்றி விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலகில் இதுவரை 37 பேர் மட்டுமே இவ்வகை அரிய தோல் நோயினால் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த இளம் பெண் மட்டுமே தன் நிலையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்நோய்க்கு இதுவரை நேரடி மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் பலரும் இப்பெண்ணுக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.