UNAIDS முகநூல்
ஹெல்த்

“எய்ட்ஸ் காரணமாக உலகில் ஒரு நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார்” - UNAIDS சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

“கடந்த ஆண்டில், உலகளவில் எச்.ஐ.வி-யால் 39.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 9.3 மில்லியன் மக்கள் அதாவது, கிட்டதட்ட மூன்றில் ஒருபகுதியினர் அதற்கு சிகிச்சை பெறாமல் இருக்கின்றனர்” என்று ஐ.நா-வின் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் எய்ட்ஸ் தொடர்பாக திரிபுரா மாநிலத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகியிருந்தது. அதில், “கடந்த 15 வருடங்களில் 828 மாணவர்களுக்கு HIV பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 47 மாணவர்கள் இறந்துவிட்டார்கள்” என்ற மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருந்தது.

இது பேசுபொருளான நிலையில், தற்போது ஐநாவின் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறிவிடும் என்ற அளவிற்கு நிலைமை உள்ளது. அப்படி ஒரு முக்கியமான தருணத்தில் இந்த உலகம் தற்போது உள்ளது.

உலகளவில் எச்.ஐ.வியால் 39.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 9.3 மில்லியன் மக்கள், அதாவது கிட்டதட்ட மூன்றில் ஒரு பகுதியினர் அதற்கான சிகிச்சையை பெறுவதில்லை. இதனால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு எய்ட்ஸ் நோயாளி இறக்கின்றார்.

உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒருங்கிணைந்து 2025 ஆம் ஆண்டுக்குள் ‘ஒரு வருடத்தில் கண்டறியப்படும் எய்ட்ஸ் நோயாளிகள்’ எண்ணிக்கையை 3,70,000 க்கு கீழே குறைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளனர். ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 1.3 மில்லியன். அதாவது மூன்று மடங்கு அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 6.3 லட்சம் மக்கள் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டில் ஒரே ஆண்டில் எய்ட்ஸால் 21 லட்சம் மக்கள் உயிரிழந்ததே இதுவரையிலான அதிகபட்ச ஒரு வருட எய்ட்ஸ் மரணங்களாகும். இன்னொருபக்கம் அடுத்த வருடமான 2025-ல் உயிரிழப்புகள் சராசரியைவிட 2.5 லட்சமாக குறையும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள நிலையை வைத்து பார்த்தால் அவை அதிகரிக்கும்போலதான் தெரிகிறது.

எச்.ஐ.வியை கட்டுக்குள் கொண்டுவர, போதுமான மற்றும் நிலையான, துணிச்சலான நடவடிக்கை உலக நாடுகளில் எடுக்கப்பட வேண்டும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும். எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் சுமார் 29 மில்லியனாக இருக்கும் என தெரிகிறது. ஒருவேளை அதற்குள் போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் ஆதரவு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை 46 மில்லியனாக உயரும் (2023-ல் இது 39.9 மில்லியன் என்றே இருந்தது).

போதை ஊசி உபயோகிப்பவர்கள், உலகம் முழுக்க ஒதுக்கப்பட்டு பாகுபாடு காட்டப்படுபவர்களான பாலியல் தொழிலாளர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரில் எய்ட்ஸால் பாதிக்கப்படுவோர் விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அவர்களில் பாதிக்கப்பட்டோர் 55% ஆக உயர்ந்துள்ளனர். இது 2010-ல் 45% என்றே இருந்தது.

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உலகமெங்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நிதிகள் கிடைக்காமல் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறைந்து, புதிய நோய்த் தொற்றுகள் உருவாகி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.