வெப்ப அலை; பிரதமர் மோடி புதிய தலைமுறை
ஹெல்த்

“கடும் வெப்ப அலை: 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும்” - ஐ.நா எச்சரிக்கை முதல் பிரதமர் ஆலோசனை வரை

கடும் வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும் என இந்தியா உட்பட கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

கடும் வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படக் கூடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.நாவின் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா உட்பட கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசகிறது. இந்த வெப்ப அலை காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படும்.

கடும் வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, குழந்தைகள் வெயிலில் வெளியில் சென்று விளையாடுவதை தடுக்க வேண்டும்.

அத்துடன் சத்தான உணவுகள், நீர் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அடங்கிய உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் வெப்ப அலைகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவில் வெப்ப அலை எந்தளவுக்கு இருக்கும், எங்கெல்லாம் அதிகம் இருக்கும், என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும், அதிக பாதிப்புக்கு உள்ளாவோர் யார், மருத்துவமனைகளில் கை இருப்பில் இருக்கவேண்டிய அத்தியாவசிய மருந்துகள் என்னென்ன, நரம்பு வழி திரவங்களின் தேவை, ஐஸ் கட்டிகள் - ஓஆர்எஸ் மற்றும் குடிநீர் கிடைப்பது, இதுதொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு போன்றவை குறித்தெல்லாம் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.