பல் ஈறுகளில் ரத்தம் வடிந்தால் வாய் சுத்தமாக இல்லை என்ற கருத்து பெரும்பாலும் பரவிவருகிறது. ஆனால் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் பல் ஈறுகளில் ரத்தம்வடிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே சத்துக் குறைபாடு நீண்ட நாட்கள் இருப்பது பல் ஈறுகளை பலவீனமடையச் செய்து ரத்தம் வடிய வழிவகுக்கும். மேலும் வைட்டமின் கே குறைபாடு ரத்தக்கட்டிகளையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே நீங்கள் பற்களை சுத்தமாக வைத்திருந்தும் ஈறுகளில் ரத்தம் கசிந்தால் உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
- வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கடுகு கீரை, பசலைக்கீரை, அவகேடோ, ஆரஞ்சு, மிளகு மற்றும் நெல்லிக்காயை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் 2 முறை பல் துலக்குவதை உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக ஃப்ளூரைடு கொண்ட டூத்பேஸ்டுகளைப் பயன்படுத்துவது அவசியம்.
- அதிகம் சர்க்கரை உணவுகளை தவிர்த்துவிடுங்கள். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது உடலில் வைட்டமின் சி மற்றும் கே சரியான அளவில் சேருவதை உறுதிசெய்கிறது.
- ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து பற்களை பரிசோதிக்க வேண்டும். பல் சொத்தை மற்றும் பிற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக சரிசெய்துவிட்டால் ஈறுகளில் ரத்தம் கசிவதை தடுத்துவிடலாம்.
- சீராக தூரிகைகள் உள்ள ப்ரஷ்களைவிட மேடுபள்ளமாக உள்ள ப்ரஷ்களே சிறந்தது. பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை இந்தவகை ப்ரஷ்கள் அகற்றிவிடும்.
- அடிக்கடி பற்களில் பிரச்னை ஏற்படுபவர்கள் மவுத்வாஷ் பயன்படுத்தும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். இது வாயின் சுத்தத்தை அதிகப்படுத்தி ரத்தக்கசிவை தடுக்கும். இது நீண்ட நாட்களாக வாயில் தங்கியிருக்கும் அழுக்குகளையும் அகற்றிவிடும்.