ஹெல்த்

மலச்சிக்கலால் அவதிப்படுபவரா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

மலச்சிக்கலால் அவதிப்படுபவரா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

Sinekadhara

மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படும் பலரும் அதுபற்றி வெளியே கூற கூச்சப்படுவர். அதேசமயம் அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்? உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் அதை கருத்தில்கொண்டு உணவுமுறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபட உதவும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த சில எளிய உணவுகள் மலச்சிக்கல் பிரச்னைகளிலிருந்து விடுபட உதவும்.

கொடிமுந்திரி: இந்த உலர்பழமானது மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபட உதவும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் இருப்பதால் குடல் இயக்கத்தை தூண்டுகிறது. மேலும் கொடிமுந்திரியில் சார்பிட்டால் மற்றும் பினாலிக் கலவைகள் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் சீராக்கும்.

அத்திப்பழம்: அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது குடல் இயக்கத்தை தூண்டி செரிமான பிரச்னைகளை சரிசெய்கிறது. அத்திப்பழத்தில் ஃபிசின் என்ற நொதிகள் இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்கிறது.

பச்சை காய்கறிகள்: கீரைகள், ப்ரக்கோலி மற்றும் பிற பச்சை காய்கறிகள் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவு. இவற்றில் நார்ச்சத்து நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன. இந்த உணவுகள் குடலின் வழியாக எளிதாக நகரக்கூடியவை.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கரையாத நார்ச்சத்துகளும் குடல் இயக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இது ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன.

சியா விதைகள்: இந்த விதைகளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இதில் 85% கரையாத நார்ச்சத்துகளும், 15% கரையக்கூடிய நார்ச்சத்துகளும் உள்ளது. இது குடல் இயக்கத்தை தூண்டி மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவும். சியா தண்ணீர், சியா ஸ்மூதீஸ் போன்ற பல வழிகளில் இதனை தினசரி சேர்த்துக்கொள்ளலாம்.