ஹெல்த்

50 வயதைக் கடந்தவரா?.. இதயத்தை பலப்படுத்த இந்த உணவுகளை மிஸ் பண்ணீராதீங்க!

50 வயதைக் கடந்தவரா?.. இதயத்தை பலப்படுத்த இந்த உணவுகளை மிஸ் பண்ணீராதீங்க!

Sinekadhara

நமக்கு வயதாக ஆக நம்முடைய உறுப்புகளின் இயக்கம் குறைந்து உடலின் வேகமும் குறைந்து கொண்டேபோகும். வயதாவதை நம்மால் மாற்றமுடியாது. ஆனால் உடலின் வேகத்தையும் ஆரோக்கியத்தையும் நம்மால் மாற்றியமைக்க முடியும். தினசரி உணவு மற்றும் டயட் முறைகள் ஆரோக்கியமான முறையில் வயதாவதை தள்ளிப்போடும்.

சில உணவுகள் போதுமான ஊட்டச்சத்தை உடலுக்கு கொடுப்பதுடன் உடலுக்கு நன்மைகள் பயப்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை உறுப்புகளின் நலனை மேம்படுத்த உதவுவதுடன் குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நல்ல உணவுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து பல்வேறு நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

இந்த 10 உணவுகள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்கி வாழ்நாளை நீட்டிக்கிறது.

1. பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள்: முட்டைக்கோஸ், ப்ரக்கோலி, பசலைக்கீரை உள்ளிட்ட பிற கீரைகள் போன்றவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது தசைகளின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

2. டார்க் சாக்லேட்: ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த டார்க் சாக்லேட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். மேலும் இது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மினரல்கள் அதிகமாக இருப்பதால் மொத்த உடல்நலனையே மேம்படுத்தும்.

3. பெர்ரீஸ்: ஜூஸியான பெர்ரி பழங்களில் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது இதய நலனை மேம்படுத்த உதவுகின்றன. இது சர்க்கரை ஆசையை போக்கக்கூடிய சிறந்த ஸ்நாக்ஸ்

4. தானியங்கள்: தானியங்களில் போதுமான மாவுச்சத்துகள் நிறைந்திருப்பதால் இது உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. இதயத்திற்கு போதுமான பலத்தை கொடுப்பதுடன், செரிமானத்திலும் முக்கியப்பங்காற்றுகிறது.

5. மீன்: மத்தி மற்றும் சால்மன் போன்ற நல்ல கொழுப்பு மீன்களில் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. 50 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த மீன்களை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் புரதம் மற்றும் வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது.

6. நட்ஸ்: 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து வயதினருக்கும் நடஸ் சிறந்த உணவு. உடலுக்கு தேவையான எனர்ஜியை வழங்குவது மட்டுமன்றி, அறிவாற்றல் மற்றும் உடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. வால்நட் போன்ற நட்ஸ்கள் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

7. காட்டேஜ் சீஸ்: இந்த சுவையான சீஸை பனீர் என்றும் சொல்லலாம். புரதச்சத்து நிறைந்துள்ள பனீர் தசைகளை பலப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

8. ஆலிவ் எண்ணெய்: இதிலும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும், இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் போன்ற பிற ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கிறது.

9. தக்காளி: தக்காளியிலுள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் சரும செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன் ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்பட்டு உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் அழற்சியை குறைக்கும் தன்மை தக்காளிக்கு உண்டு.

10. தண்ணீர்: தண்ணீர் உணவு லிஸ்ட்டில் வராவிட்டாலும், இதனை சூப்பர் உணவு லிஸ்ட்டில் கட்டாயம் சேர்க்கத்தான் வேண்டும். போதுமான நீரேற்றம், செரிமானம் உள்ளிட்ட உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு துணைபுரிந்து ஆரோக்கிமாக இருக்க உதவுகிறது.