வாழ்க்கை முறை மாறியதால் புதுப்புது நோய்களும் தற்போது உருவாக ஆரம்பித்திருக்கின்றன. அதிலும் குழந்தைகள், இளைஞர்கள் புதிய நோயால் பாதிக்கப்படுவதுதான் நம்மை வேதனைப்பட வைக்கிறது... கணினி யுகம் தொடங்கிவிட்டதால், மொபைல் போன், மடிக்கணினியின் பயன்பாடுகள் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன.
அதே நேரம் இந்த நவீன GADGET-கள் குழந்தைகள் கைகளுக்கு செல்வது அவர்களது ஆரோக்கியத்திற்கும் உலை வைப்பதாக மாறி வருகிறது. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. குழந்தைகளிடம் இருந்து தூரத்தில் இருந்த மொபைல் போன்கள், அதற்குப் பிறகே அவர்களது கைகளில் தவழ ஆரம்பித்தன. அதன் விளைவால், பல குழந்தைகள் மொபைல் பயன்பாட்டுக்கு அடிமையாகிவிட்டனர்.
இதனால் மனரீதியான பாதிப்பு ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் உடல்ரீதியான பாதிப்புகளுக்கும் குழந்தைகள் ஆளாகிறார்கள். அதில் ஒருவகையான பாதிப்புதான் TEXT NECK SYNDROME... சரியான நிலையில் அமராமல் மொபைல் போன்கள், மடிக்கணினிகளை பயன்படுத்துவதால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
நாளொன்றுக்கு 5 முதல் 7 மணி நேரம் வரை ஸ்மார்ட் போன்களை கையாள்வதால், அதில் வரும் தகவல்களை படிக்க தலையை முன்புறமாக வளைத்து சாய்க்க வேண்டியுள்ளது. இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
TEXT NECK SYNDROME என்ற கழுத்து எலும்பு தசை பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமெனில், மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கணினியில் பணியாற்றுபவர்கள் அவ்வப்போது எழுந்து சென்று தளர்வாக இருக்க வேண்டும். ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்க்க வேண்டும். தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தம் தரும் வகையில் அமரக் கூடாது. தட்டச்சு செய்வது, மொபைல் போனை ஸ்வைப் செய்வது போன்ற மீண்டும் மீண்டும் செய்யக் கூடிய செயல்களை நீண்ட நேரம் மேற்கொள்ளக் கூடாது. நீண்ட நேரத்திற்கு கனமான கேட்ஜெட்களை வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.