மூளையை உண்ணும் அமீபா முகநூல்
ஹெல்த்

மூளை உண்ணும் அமீபா : அடுத்தடுத்து ஏற்படும் மரணம்... தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

கோழிக்கோட்டில் நடந்த கொடுமை

கேரளாவின் கோழிக்கோடை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் மிருதுல். இவருக்கு கடந்த ஜூன் 24 ஆம் தேதி தலைவலி, வாந்தி ஏற்பட்ட நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மூளை உண்ணும் அமீபா

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு primary amoebic meningoencephalitis எனப்படும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, இச்சிறுவன் குளம் ஒன்றில் குளித்த பிறகுதான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

சம்பவம் 2 

இதேபோல கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுவன் மூணாறுக்கு பள்ளி சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் குளித்ததில் அவருக்கும் அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் 3 

மூன்றாவதாக, மலப்புரத்தை சேர்ந்த ஃபட்வா என்ற 5 வயது சிறுவன், கடலுண்டி ஆற்றில் கடந்த மே1 ஆம் தேதி தனது உறவினர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதன்பிறகு வாந்தி, தலைவலியால் பாதிக்கப்பட்ட இச்சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன்பிறகு இவரை சோதனை செய்யவே, அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சில நாட்களிலேயே இச்சிறுவனும் உயிரிழந்துள்ளார்.

மூளைத்திண்ணும் அமீபா என்றால் என்ன?

இது குறித்து அமெரிக்காவிலுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்,

“நெக்லேரியா என்பது ஓர் ஒற்றை செல் உயிரினம். இந்த அமீபா ஏரிகள், ஆறுகளில் காணப்படும். அனைத்துவகை அமீபாவும் கொல்லும் தன்மையுடன் இருக்காது. நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீதான் மனிதர்களின் மூக்கு வழியாக நுழைந்து, மூளைக்குச் சென்று திசுக்களையும், நரம்புகளையும் தாக்கி சேதப்படுத்தி, மூளையில் `Primary amebic meningoencephalitis' தொற்றை ஏற்படுத்துகிறது” என்று தெரிவிக்கின்றனர்.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மூளையைத் திண்ணும் அமீபாவால் மூன்று பேர் உயிரிழந்துள்ள சூழலில், இதுகுறித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பில், ”தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்கவும்; நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கபட வேண்டும். சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு செல்ல பரிந்துரைக்கப்பட வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்தொற்று மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.