ஹெல்த்

பல் சொத்தையா? - இதை கவனியுங்க

பல் சொத்தையா? - இதை கவனியுங்க

Sinekadhara

பல் சொத்தை என்பது பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பொதுவான பிரச்னை என்கிறது உலக சுகாதார நிறுவனம். இது மிகவும் பரவலான, அதேசமயம் தொற்று அல்லாத ஒரு நோய்(non-communicable disease). பல் சிதைவை பொறுத்தவரை பல்லின் மேற்பகுதி, அதாவது எனாமல் சேதமடைந்து சிறுசிறு துளைகள் உருவாகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு பாக்டீரியா தொற்றால் பல் சொத்தையாகிறது. சிலருக்கு அதிக சர்க்கரை உணவுகள், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகள், வாய் வறட்சி மற்றும் பல்லை சுத்தமாக வைத்திருக்காமை போன்ற காரணங்களால் பற்சொத்தை உருவாகிறது. சிலருக்கு உணவு சார்ந்த பிரச்னைகள் மற்றும் உடலில் அமில சுரப்புகள் மாற்றத்தால் பற்சொத்தை ஏற்படுகிறது.

பற்சொத்தை அறிகுறிகள்

முதலில் சிறிதாக ஆரம்பித்து பிறகு மெல்ல மெல்ல பெரிதாகிறது. ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.

பற்களில் கறை

பற்சொத்தையின் ஆரம்பக்கட்ட அறிகுறி, முதலில் பற்களில் வெண்புள்ளிகள் உருவாகி நாளடைவில் அது கருமையாகிக்கொண்டே போகும். கடைசியில் அது அடர் ப்ரவுன் அல்லது கருப்பாகிவிடும் அல்லது பல்லின் நிறம் மாறிவிடும்.

குழி அல்லது துளை

ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்த துளை பெரிதாகும் அல்லது பல் உடைதலை ஏற்படுத்திவிடும்.

சூடான அல்லது குளிர்ந்த பொருட்கள்

பற்சொத்தையால் மேற்பகுதியான எனாமல் தேய்ந்து பல்லின் டென்டின் அடுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கும். இதனால் குளிர்ந்த அல்லது சூடான பொருட்களை உண்ணும்போது டென்டின் பகுதி நரம்புகள் சென்சிட்டிவ் ஆகி பற்கூச்சம் அல்லது பல்வலிக்கு வழிவகுக்கும். இதனால்தான் பற்சொத்தை இருப்பவர்களுக்கு குளிர்ந்த அல்லது சூடான உணவுகளை உட்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இனிப்புகள்

சூடான அல்லது குளிர்ந்த உணவுகளைப் போன்றே இனிப்புகளும் ஒருவித உணர்ச்சியை பல்லுக்குக் கொடுக்கும். அதாவது பற்களுக்குள் இழுப்பதுபோன்ற உணர்வு உருவாகும்.

பல்வலி அல்லது சீழ் வடிதல்

பல் சொத்தையை கவனிக்காமல் விடும்போது பற்கள் வீங்கி அதாவது, நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அடங்கிய பல்லை சுற்றியுள்ள மென்மையான திசுக்கள் வீங்கிவிடும். இது தீவிர வலி மற்றும் சீழ் வடிதலுக்கு வழிவகுக்கும்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது கட்டாயம் பல்மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.