நவீன மருந்துகளுக்கு எதிரான பதஞ்சலி ஆயுர்வேதாவின் விளம்பரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம், பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் மற்றும் தவறான உரிமைகோரல்கள் இருந்தால், ஒவ்வொரு தயாரிப்புக்கும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
தவறான மருத்துவ விளம்பரங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது
பதஞ்சலியின் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதஞ்சலியின் அனைத்து தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று தெரிவித்தது. அத்தோடு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்துவதாக தவறான உரிமைகோரல்களை வெளியிடும் பதஞ்சலியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது உச்ச நீதிமன்றம்.
மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்றும், ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் எதையும் வெளியிடக்கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தை அலோபதிக்கும் ஆயுர்வேதத்திற்கும் இடையிலான விவாதமாக மாற்ற விரும்பவில்லை எனவும் ஆனால் தவறான விளம்பரங்களைத் தடுக்க ஒரு தீர்வு தேவை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் , அலோபதிக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டதற்காக நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.