சைக்கிள்  Facebook
ஹெல்த்

சைக்கிள் ஓட்டுவது முன்கூட்டிய மரண அபாயத்தை 47% குறைக்கிறதா? ஆய்வு சொல்வது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

சைக்கிள் பயன்படுத்துபவருக்கு மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டிய மரண அபாயம் 47 சதவீதம் குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னொரு காலத்தில் இரண்டு சக்கர வாகனமாக இருந்ததே சைக்கிள்கள்தான். ஆனால், தொழில்நுட்பம் வளர வளர சைக்கிள்களின் பயன்பாடும் குறையத் தொடங்கியது. ஆனால், இப்பொழுது மீண்டும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காரணம்!.. சைக்கிளின் மீது கொண்ட காதல் அல்ல. உயிரின் மீது கொண்ட பயம்தான்..

ஆம், உடல் ஆரோக்கியத்துக்கு பெருதும் உதவுவது சைக்கிள்தான் என அனைவரும் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், தற்போது இதற்கான ஆதாரத்தையே சமீபத்திய ஆய்வு ஒன்று கொடுத்துள்ளது.

பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மை குறித்த இந்த ஆய்வு BMJ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, 16-74 வரையிலான வயதுடைய 82,000 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கிட்டதட்ட 18 ஆண்டுகள் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தேர்ந்தெடுத்த தனிப்பட்ட நபர்களிடம் போக்குவரத்துக்காக பயன்படுத்திய வாகனம் என்ன என்பது குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட நபரின் மருந்துசீட்டு, மருத்துவ அறிக்கைகள், இறப்பு குறித்த தகவல்கள் என அனைத்து தகவலையும் ஆய்வாளர்கள் பெற்றுள்ளனர்.

ஆய்வின் மூலம் வெளியான முடிவு?

,“சைக்கிள் பயன்படுத்துபவருக்கு மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டிய மரண அபாயம் 47% குறைகிறது. வேலைக்கு செல்வது போன்ற காரணங்களால் சைக்கிள் ஓட்டி செல்பவர்களுக்கு, புற்றுநோயால் உயிரிழப்பு 51%, இருதய கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 24%, மனநல கோளாறு ஏற்படுவது 20% குறைவாக உள்ளது “ என்று தெரிவித்துள்ளது. எனவே சைக்கிள் அதிகமாக பயன்படுத்தினால், அது ஆயுள் நாட்களை அதிகரிக்கிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.