இந்தியாவில் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரஆராய்ச்சித்துறையும் நீரிழிவு நோய் குறித்து ஆய்வுகள் நடத்தியுள்ளன. அதில், சிகிச்சை அளிக்கப்படாத நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க, மத்திய அரசும், மாநில அரசுகளும் இன்னும் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 36.3 சதவிகிதம் பேர் நல்ல கிளைசெமிக் கட்டுப்பாட்டை அடைந்துள்ளனர் என்றும், அவர்களில் 48.8 சதவிகிதம் பேர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டையும், 41.5 சதவிகிதம் பேர் கொழுப்பின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் தங்கள் HBA1C அளவை 7 சதவிகிதத்திற்கும் குறைவாகக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 33.4 சதவிகிதம் பேர் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 5,789 பேரிடம் ஆய்வு செய்ததில், 35.6 சதவிகித ஆண்களும், 36.8 சதவிகித பெண்களும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 35.3 சதவிகித ஆண்களும், 33.7 சதவிகித பெண்களும் நீரிழிவு நோயை சுமாரான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28.9 சதவிகித ஆண்களும், 29.4 சதவிகித பெண்களும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் வெடித்த 'எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி' - 80 வயது முதியவர் பலி!