தீக்காய சிகிச்சை பிரிவு முகநூல்
ஹெல்த்

தீபாவளி முன்னெச்சரிக்கை - 95 மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு துவக்கம்!

தீபாவளி திருநாளின் போது ஏற்படும் தீடீர் தீ விபத்துகளை கையாளும் வகையில் 95 மருத்துவமனைகளில் தீக்காய தனி சிகிச்சை பிரிவானது துவங்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தீபாவளி திருநாளுக்காக ஆரவார கொண்டாட்டத்தோடு தயாராகி கொண்டிருக்கும் அனைவரும் தங்களது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம். இதற்காக தீபாவளியையொட்டி எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுகள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனொரு பகுதியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இதற்கான சிறப்பு பிரிவை (தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு) மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவங்கிவைத்தார்.

தொடர்ந்து இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது மற்றும் தீ விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பல ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில், முதல்வர் வழிகாட்டுதலின் அடிப்படையில் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக பட்டாசு வெடிப்பதற்குரிய நேரம், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் எந்தவித தீ விபத்தும் இல்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

எனவே திடீர் தீ விபத்தினை கையாளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதன் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என 95 இடங்களில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 750 படுக்கைகளுடன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தீக்காய பிரிவில் 20 படுக்கைகள் வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்ட நிலையில், 5 வெண்டிலேட்டர் கருவிகளுடன் ஆண்கள் வார்டில் 12 படுக்கையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 8 படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.