அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் ஜர்னல் சார்பாக 90,000 பேரிடம் ஆய்வொன்று செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் ஈடுபட்ட அனைவருக்கும் accelerometer (ஒரு கட்டமைப்பின் அதிர்வு அல்லது இயக்கத்தின் முடுக்கத்தை அளவிடும் ஒரு சாதனம்) என்ற கருவி தரப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் அனைவரும் ‘நடக்கும் நேரம் எவ்வளவு’ மற்றும் ‘ஒரே இடத்தில் உட்கார்ந்த நேரம் எவ்வளவு’ என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளைக் கொண்டு, அவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, இதயம் செயலிழப்பு ஆகியவை வருவது குறித்து சோதனை செய்யப்பட்டது.
அதில், நீண்ட நேரம் இடைவேளையின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும் என தெரியவந்துள்ளது. இது குறித்து கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் நடத்தை மருத்துவத்தின் இணைப் பேராசிரியரான டாக்டர். கீத் டயஸ் தெரிவிக்கையில், “அதிகமாக உட்காருவது ஆரோக்கியத்துக்கு மிகவும் மோசமானது. இருப்பினும், இதுப்பற்றி தெரிந்து கொள்ள கூடுதல் ஆராய்சிகள் தேவை..” என்று தெரிவித்தார்.
மேலும், இது குறித்து கூறும் மருத்துவர்கள் “உடற்பயிற்சி செய்தாலும் இதில் இருந்து தப்ப முடியாது” எனக்கூறுகின்றனர். உடல் அசைவுகள் மிகவும் முக்கியம் எனவும், அடிக்கடி சிறுது நேரம் இடைவேளை எடுப்பது நல்லது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஒருவர் நிமிர்ந்து நிற்கும் பட்சத்தில், இதயம் மற்றும் இருதய அமைப்புகள், குடல்களின் செயல்பாடு போன்றவை திறம்பட இருக்கும். இதனால் அவர்களுக்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது பல எதிர்மறையான பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
அதில் குறிப்பாக ஏற்படும் சில பிரச்னைகள், இங்கே...:
வாரத்திற்கு 11 மணிநேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களை விட, வாரத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு இதய நோய்களால் இறக்கும் ஆபத்து 64 சதவீதம் அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்தால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 147 சதவீதம் அதிகம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐந்து நாட்கள் படுத்தப்படுக்கையாக மாறிவிட்டால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு என்பது அதிகரித்துவிடும். அதேபோல, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 112% அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நுரையீரல், கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் என சில வகையான புற்றுநோய்கள் உருவாக காரணமாக அதிக நேரம் உட்கார்வது இருக்கிறது. ஆனால், இதன் பின்னனியில் இருக்கும் காரணங்கள் தெரியவில்லை.
கணினியில் அதிக நேரம் செலவழித்தால், கழுத்து மற்றும் தோள்களில் வலி மற்றும் விறைப்பு ஏற்படும்
நரம்பு ரத்த உறைவு (DVT) , கணுக்கால் வீக்கம் போன்றவை ஏற்படும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வெரிக்கோஸ் வெயின் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரத்த கட்டிகளுக்கு வழிவகுக்கும்.
உட்கார்ந்தே இருப்பது, மன ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டின் ஆபத்தும் அதிகமாகும்.