தமிழகத்தில் 5ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு வரலாம் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆய்விற்கான காரணம் என்ன? இதில், கூடுதலாக என்னென்ன தகவல்கள் கிடைத்துள்ளன? என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் 10% பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் குறித்த தரவுகள் இல்லாததால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ஆய்வு, மாநிலம் முழுவதும் சுமார் 177 இடங்களில் நடத்தப்பட்டது. சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறையும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. தவிர, ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு சுகாதார ஆய்வாளர் உட்பட 92 ஆய்வுக் குழுக்கள், தரவுகளை திரட்டியது.
சிறியவர்கள் உட்பட 5 ஆயிரத்து 310 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு, அதில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 4 ஆயிரத்து 741 பேரில், 455 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் ஆரம்ப நிலை கண்டறியப்பட்டது. மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் புரதம், சிறுநீர் வழியே வெளியேறும்தன்மை 367 பேருக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 741 பேரில் 934 பேர் அதாவது, 19.7 விழுக்காட்டினருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆரம்ப கட்ட கணக்கெடுப்பின் மூலம் 5ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதில், பலருக்கும் சிறுநீரகம் சார்ந்த பிரச்னை தங்களுக்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுநீரகங்கள் தொடர்பான நோய்களின் பாதிப்பு சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. குறிப்பாக, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.