ஹெல்த்

ரெட் ஒயின் குடிப்பது இதயத்துக்கு நல்லதா? ஆனால்... - என்ன சொல்கிறது ஆய்வுகள்?

ரெட் ஒயின் குடிப்பது இதயத்துக்கு நல்லதா? ஆனால்... - என்ன சொல்கிறது ஆய்வுகள்?

Sinekadhara

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவை குறித்து அவ்வப்போது வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் ஒரு உணவுப்பொருளோ அல்லது ஒரு செயலின் மீதான கருத்தையே மாற்றிவிடுகின்றன. அதுபோலத்தான் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின் முடிவு பலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஒயின் குடித்தால் நிறம் கூடும் என்ற கருத்து பரவலாக பரவிவரும் நிலையில் தற்போது மிதமான அளவில் ரெட் ஒயின் குடிப்பது இதயத்திற்கு நன்மை பயக்கும் என்கிறது ஆய்வுகள்.

ரெட் ஒயினில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்திருப்பதால் உடலில் நல்ல கொழுப்புகள் சேர்வதுடன் தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இருப்பினும் அதிக அளவில் ரெட் ஒயினை உட்கொண்டால் அதுவே உடலுக்கு தீங்காக மாறிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர். ரெட் ஒயினில் பாலிபெனால்கள் என்று சொல்லக்கூடிய ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்திருப்பதால் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வேகமாக உடலில் வேலை செய்யும் இயற்கை சேர்மங்களில் ஒன்றான ரெஸ்வெராட்ரோல் திராட்சை தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது சிவப்பு ஒயினில் அதிகமாக உள்ளது.

ரெட் ஒயின் இதய நலனுக்கு எவ்வாறு உதவுகிறது?

ரெட் ஒயின் இதயத்திற்கு பல நன்மைகள் தருவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் சில...

  • HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
  • ரத்தத்தில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது.
  • LDL என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்புகளால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்கிறது.
  • இரத்த நாளங்களை ஒழுங்குப்படுத்தும் செல் அடுக்குகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

மிதமான அளவில் ரெட் ஒயின்! அதுவே மிதமிஞ்சினால்?

ரெட் ஒயினில் பல நன்மைகள் இருந்தாலும் அதை மிதமான அளவில்தான் குடிக்கவேண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் எடுத்துக்கொள்ளவே வேண்டாம் என எச்சரிக்கப்பட்டாலும் பலரால் அதை தவிர்க்கமுடிவதில்லை. அளவுக்கு மீறி ஆல்கஹாலை எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு பெரும் தீங்காக அமையும். American Heart Association மற்றும் National Heart, Lung, and Blood Institute ஆல்கஹால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் அதை பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. அதிகப்படியான ரெட் ஒயின் உடலுக்கு என்னென்ன மாதிரியான தீங்குகளை விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயக்கோளாறு, உடற்பருமன், சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் நோய்கள் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர். ஒருவழியில் பார்த்தால் உடலுக்கு நன்மை பயப்பதாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிறார்கள். இதில் மது எம்மாத்திரம்?