சமச்சீர் உணவின் முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. ஊட்டச்சத்துமிக்க உணவு உடல் மற்றும் மனதை ஆரோக்யமாகவும் பலமாகவும் வைத்திருப்பதுடன் பல நோய்க்கிருமிகளின் தாக்கங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, இ, சி மற்றும் டி ஆகியவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதாக அமெரிக்க ஊட்டச்சத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைட்டமின்கள் சுவாசப் பிரச்னைகளைத் தடுப்பதாகவும் கூறியுள்ளது. BMJ Nutrition Prevention & Health வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
6115 இளம்வயதினரை வைத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் 3 நாட்களுக்கு அவர்கள் கடைபிடிக்கும் உணவுமுறையின் தரவுகள் முதலில் பெறப்பட்டது. 3 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உடலின் நிலையை வயது, பாலினம், எடை, புகைப்பிடித்தல், வீட்டு வருமானம் மற்றும் எந்த அளவு உட்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து உடலின் நிலை குறித்த தரவுகள் பிரிக்கப்பட்டது.
அதில் 33 பேருக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, இ, சி மற்றும் டி குறைவாக எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதில் உடல் எடைக்கும், வைட்டமின் உட்கொள்ளுதலுக்கும் இடையேயான தொடர்பை கருத்தில்கொள்ளவில்லை.
இது மேலோட்டமாக ஆய்வு என்பதால் இதை வைத்து உறுதிபடுத்த முடியாது என்றும், இதுகுறித்து மேலும் தெளிவான ஆராய்ச்சி தேவை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஆனால் சரிவிகித உணவை உட்கொண்டால் மட்டுமே நம்மால் உறுதியான உடலைப் பெறமுடியும்.