ஹெல்த்

கிலாய் மூலிகையை கல்லீரல் பாதிப்புடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறானது: ஆயுஷ் அமைச்சகம்

நிவேதா ஜெகராஜா

இந்திய தேசிய சங்கத்தின் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகையான ‘கல்லீரல் தொடர்பான மருத்துவ சோதனைகள்’ (Journal of Clinical and Experimental Hepatology) சமீபத்தில் ஆய்வொன்று செய்திருந்தது. அந்த ஆய்வில், தமிழில் அமிர்தவல்லி என அழைக்கப்படும் ‘கிலாய்’ அல்லது ‘குடுச்சி’ என்ற ‘டைனோஸ்போரா கார்டிஃபாலியா’ (டிசி) என்ற மூலிகையை உபயோகித்த ஆறு நோயாளிகளுக்கு, கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் இன்று கருத்து தெரிவித்துள்ளது.

இந்த கிலாய் மூலிகை, உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் என கூறப்படுவதால் கொரோனா பேரிடர் நேரத்தில் இதன் உபயோகம் அதிகரித்திருந்ததென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதை முன்னிறுத்தியே, இதன் பக்கவிளைவுகள் பற்றிய ஆய்வை ‘கல்லீரல் தொடர்பான மருத்துவ சோதனைகள்’ முன்னெடுத்து முடிவை  வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில்தான் சிக்கல் இருப்பதாக ஆயுஷ் கூறியுள்ளது.

இதுதொடர்பான ஆயுஷ் அமைச்சகத்தின் அறிக்கையில், இந்த ஆய்வறிக்கைக்கு சம்பந்தமான மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் முறையான வடிவத்தில் வழங்க அறிக்கையின் ஆசிரியர்கள் தவறியுள்ளதென அமைச்சகம் கருதுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அமைச்சகத்தின் விளக்கத்தின் முழுவிவரம் இங்கே:

”கிலாய் (அ) டிசி-யை கல்லீரல் பாதிப்புடன் தொடர்புபடுத்துவது, பாரம்பரிய மருத்துவ முறைக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்றதாகும். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் டிசி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆய்வுக்கு உட்பட்ட நோயாளிகள் பயன்படுத்திய மூலிகையின் உட்பொருட்களை இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் ஆராயவில்லை என்பது இந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு எங்களுக்கு தெரியவந்தது.

நோயாளிகள் பயன்படுத்திய மூலிகை, ‘டி.சி’ என்பதையும் வேறு எந்த மூலிகையும் இல்லை என்பதையும் உறுதி செய்வது ஆசிரியர்களின் பொறுப்பாகும். உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் தாவரவியலாளரின் கருத்தைக் கேட்டிருப்பார்கள் அல்லது ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையைப் பெற்றிருப்பார்கள்.

மூலிகையை சரியாக கண்டறியவில்லையெனில் தவறான விளைவுகள் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட, இங்கு ஏராளமான ஆய்வறிக்கைகள் உள்ளன. ‘கிலாய்’ மூலிகையைப் போலவே தோற்றமளிக்கும் டைனோஸ்பாரோ கிரிஸ்பா (TinosporoCrispa) என்ற மற்றொரு மூலிகைகூட, கல்லீரலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி இருக்கக்கூடும். எனவே கிலாய் போன்ற மூலிகையின் பெயரை குறிப்பிடுவதற்கு முன்பு சரியான விதிமுறைகளைப் பின்பற்றி அந்த மூலிகையை ஆசிரியர்கள் சரியாகக் கண்டறிந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என தெரிகிறது.

இதுதவிர இந்த ஆய்வறிக்கையில் பல்வேறு தவறுகளும் உள்ளன. நோயாளிகள் எந்த அளவில் இதனை எடுத்துக்கொண்டார்கள் அல்லது இந்த மூலிகையை மற்ற மருந்துகளுடன் எடுத்துக் கொண்டார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. நோயாளிகளின் கடந்த கால அல்லது தற்போதைய மருத்துவ ஆவணங்களும் ஆய்வின்போது கருத்தில் கொள்ளப்படவில்லை.

முழுமையற்ற தகவல்களை  அடிப்படையாகக் கொண்ட வெளியீடுகள், தவறான தகவல்களுக்கு வித்திடுவதுடன் ஆயுர்வேதத்தின் பழமையான பழக்கவழக்கங்களையும் இழிவுபடுத்தும்” என ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.