பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் புதிய தலைமுறை
ஹெல்த்

எலிக் காய்ச்சலால் அச்சப்பட வேண்டாம்! -பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எலிக்காய்சல் பரவிய நிலையில் , எலிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம், பாதிக்கப்பட்ட மக்கள் நலமுடம் இருக்கிறார்கள் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் : பிரவீண்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியான நிலையில், பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எலியின் சிறுநீரில் இருந்து பரவிய எலி காய்ச்சலால் அச்சப்பட வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “ பாதிப்பு ஏற்பட்டுள்ள மொக்கத்தான் பாறை மலைவாழ் கிராம மக்கள் முழு கண்காணிப்பில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தேவையான, போதுமான மருந்துகளும் சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

எலிக்காய்ச்சல் என்றால் என்ன?

எலிகாய்ச்சலை பொறுத்தவரை எலியின் சிறுநீரிலிருந்து பரவிய நோய்தான் எலிக்காய்ச்சல். விலங்குகளின் சிறுநீர், உணவு அல்லது தண்ணீரில் கலக்கும்போதுதான் இவை பரவுகிறது.

இவ்வகை பாதிப்புகள் காய்ச்சல் போலதான் தொடங்கும். சில சமயங்களில் சில உறுப்புகளையே இவை செயல் இழக்க செய்து விடும் . ஆனால் தொடக்கத்திலேயே சிகிச்சை கொடுத்துவிட்டால் சரி செய்து விடலாம். மேலும் இதற்கு போதுமான மருந்துகள் உள்ளன. ஆகவே அச்சப்படத் தேவையில்லை.

மொக்கத்தான் பாறை மக்களின் தற்போதையை நிலை:

பாதிப்பு ஏற்பட்டுள்ள மொக்கத்தான் பாறை கிராமத்தில் முகாம்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. 14 குழந்தைகளை தவிர வேறு யாருக்கும் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை . அவர்களும் நலமுடன் உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு தேவையான போதுமான மருந்துகள் நம் இருப்பில் உள்ளன. தற்போது மலை கிராமங்களில் இந்த நோய் பரவியுள்ளது.

உசிலம்பட்டி மொக்கத்தான் பாறையை தவிர வேறு எங்கும் தற்போது வரை எலிக்காய்ச்சல் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரப் பகுதிகளில் வெள்ளம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது இது போன்ற பிரச்னைகள் கால்நடைகளுக்கு கூட பரவியுள்ளது. நல்ல சுத்தமான குடிநீரை பயன்படுத்தினால் இந்த பிரச்னை வரவே வராது .” என்று தெரிவித்துள்ளார்.